16 மசோதாக்கள் ! பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்பு திருத்த மசோதாவையும் தாக்கல் செய்ய திட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை(ஜனவரி 31ம்தேதி) தொடங்க இருக்கும் நிலையில் இதில் வக்ஃபு திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களையும், நிதி மசோதாக்களையும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், இந்தியன் ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே வாரியச் சட்டங்களை இணைத்தல் மசோதா ஆகியவையும் தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான நாளை(வெள்ளிக்கிழமை) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். அதைத் தொடர்ந்து 2024-25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுபட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
பேரிடர் மேலாண்மை மற்றும் எண்ணெய்வளச் சட்டங்கள் திருத்தமசோதாவும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தவிர கிராம மேலாண்மை நிறுவனத்தின் பெயரை திருபுவன் சகாரி பல்கலைக்கழகம் என பெயர்மாற்றும் மசோதா, இந்த நிறுவனத்தை தேசிய முக்கியத்துவமாக அறிவிக்கும் திட்டமும் இருக்கிறது.
விமானப் போக்குவரத்து துறையின் நலனுக்காகவும், பாதுகாக்கவும் சில மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. தற்போதுள்ள கடும் கட்டுப்பாடுகள் குறிப்பாக குடியேற்ற சோதனைகள், வெளிநாட்டினர் வருகை குறித்து திருத்தங்கள் இருக்கலாம். வக்ஃபு வாரிய திருத்த மசோதா இந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மசோதாவில் 44 திருத்தங்கள் கோரப்பட்டன. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு திருத்தங்கள் கோரிய நிலையில் அதில் பெரும்பாலானவை பாஜக எம்.பிக்கள், கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் நிராகரித்தனர்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு இறுதியாக 14 திருத்தங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது, எதிர்க்கட்சிகள் கோரிய 44 திருத்தங்கள் புறக்கணிக்கப்பட்டன. இந்த வரைவு அறிக்கையை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம், பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான குழுவினர் இன்று வழங்கினர், இந்தக் கூட்டத்தொடரி்ல் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. இது தவிர நிதி மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. 1961 வருமானவரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய நேர்முகவரி மசோதா தாக்கலாகிறது. இந்த மசோதாவில் வருமானவரி சட்டங்கள் மிக எளிமையாகவும், எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியவகையிலும், எளிதாக வருமானவரியை கணக்கீடு செய்யும் வகையில், ரிட்டன் தாக்கல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதா: வரைவு அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்
இது தவிர வங்கி ஒழுங்குமுறை சட்டங்கள், வங்கித்துறை நிர்வாகத்தை வலுப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளன. கடற்சார்பு சட்டங்கள், கப்பல் துறை சார்பில்சட்டங்களை எளிமைப்படுத்துதல், எண்ணெய்வள திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது, கச்சா எண்ணெய் எடுத்தல், சுத்திகரித்த சட்டங்களில் திருத்தங்கள் செய்தல்.
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பேரிடர் பாதுகாப்பு திட்டங்களுக்கு மத்திய மாநில அளவிலான படைகள் பொறுப்பேற்பது, தரவுகளை அவ்வப்போது இருதரப்பும் பகிர்ந்து கொள்ளுதல், விரைவாகவும், வேகமாகவும் செயல்படுதல் ஆகியவை இந்த மசோதாவில் இருக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: தேசத்தை உலுக்கிய ‘கருப்பு பட்ஜெட்’ ! எப்போது தாக்கலானது, காரணம் என்ன?