×
 

கோடிகளில் கொடுக்கப்பட்ட ஆஃபர்.. அமித் ஷாவால் மனம் மாறிய நக்சல்கள்.. 11 பெண்கள் உட்பட 33 பேர் சரண்..!

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ரூ.49 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 11 பெண்கள் உட்பட 33 நக்சல்கள் போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் நக்சல்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நக்சல் சரணடைதல் / பாதிக்கப்பட்டோர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கொள்கை 2025-ன் கீழ், எல்வாட் பஞ்சாயத்து யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் உங்கள் நல்ல கிராமம் என அழைகப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி, நக்சல்களை சரணடைய வைத்து, தங்களை நக்சல் இல்லாதவர்களாக அறிவிக்கும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை அனுமதிப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தொடர்ந்து நக்சல் அமைப்பில் இருந்து விலகி, பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உங்கள் நல்ல கிராமம் என்ற, அரசின் திட்டத்தால் கவரப்பட்ட 33 நக்சல்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முன் சரணடைந்துள்ளனர். இதில், 11 பேர் பெண்கள். மாவோயிஸ்ட்களின் வெற்று சித்தாந்தம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள், உள்ளூர் பழங்குடியினர் மீதான அட்டூழியங்களால் வெறுப்படைந்து சரண் அடைந்ததாக நக்சல்கள் தெரிவித்தனர்.

சத்தீஸ்கரின் மாட் மற்றும் ஒடிசாவின் நுவாபாடா பகுதியில், தீவிரமாக செயல்பட்டு வந்த 22 நக்சல்கள் நேற்று காலை போலீசில் சரணடைந்தனர். தொடர்ந்து மேலும், 11 நக்சல்கள் சரணடைந்தனர். இதனால் சரணடைந்த நக்சல்கள் எண்ணிக்கை, 33 ஆக அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: தொடரும் நக்சல் வேட்டை.. நக்சலைட் 22 பேர் அதிரடி கைது..! சொல்லி அடிக்கும் அமித் ஷா..!

மாட் பகுதியில் செயல்படும் மாவோயிஸ்ட்களான மக்கள் விடுதலை கொரில்லா படையின் துணை தளபதி முச்சாகி ஜோகா (வயது 33), அவரது மனைவியும் அதே படையின் உறுப்பினருமான முச்சாகி ஜோகி (வயது 28) ஆகிய இருவரும் சரண் அடைந்துள்ளனர். இவர்களது தலைக்கு தலா 8 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டி இருந்தது. சரணடைந்த அனைத்து நக்சல்களின் மறுவாழ்வுக்காக தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுக்மாவின் படேசெட்டி பஞ்சாயத்தில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர், இதன் காரணமாக இந்த பஞ்சாயத்து முற்றிலும் நக்சல் இல்லாததாக மாறியுள்ளது. மேலும், 22 நக்சலைட்டுகள் சுக்மாவில் சரணடைந்தனர், மொத்த சரணடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.

நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போராடும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் சத்தீஸ்கர் போலீசாரை நான் வாழ்த்துகிறேன். மறைந்திருக்கும் நக்சலைட்டுகள் மத்திய அரசின் சரணடைதல் கொள்கையை ஏற்று, கூடிய விரைவில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன்னர் நக்சலிசத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவிப்பதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
 

இதையும் படிங்க: 10 நாள் நக்சல் வேட்டை.. முக்கிய தலை உட்பட 48 பேர் அவுட்.. ரூ.25 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர் காலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share