துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்.. அலறிய 4 வயது சிறுவன்.. ஆந்திராவில் அரங்கேறிய சோகம்..!
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்ததில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் ஸ்வர்ண பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் நாகராஜு - ராணி தம்பதி. இவர்களின் நான்கு வயது மகன் ஐசக்குடன் உள்ளூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகராஜு பணிக்கு சென்ற நிலையில், ராணி வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். ஐசக் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஐசக் மீது பாய்ந்து கடித்து குதறி கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது. அக்கம் பக்கத்தினர் அரும்பாடு பட்டு சிறுவன் ஐசைகை தெரு நாயிடமிருந்து மீட்டு காப்பாற்றினர்.
தொடர்ந்து அவனை சிகிச்சைக்காக குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஐசக் பரிதாபமாக மரணமடைந்தான். தெரு நாய்கள் தாக்குதலால் தினந்தோறும் எதே ஒரு இடத்தில் தாக்குதல் உயிரிழப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர். இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த நாய்க்கடி சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வழிப்பறியில் ஈடுபட்ட கவுன்சிலர்.. ஆந்திராவில் தங்க பிஸ்கட்கள் அபேஸ்.. போலீசார் அதிரடியால் 4 பேர் கைது..!
இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் மகாராஷ்டிராவில் 3.5 லட்சம் நாய்க்கடி வழக்குகளும், தமிழ்நாட்டில் 3 லட்சம் நாய்க்கடி வழக்குகளும், ஆந்திராவில் 1 லட்சம் நாய்க்கடி வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு பின்பு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து 6 கோடியாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், நாய் கடித்து உண்டாகும் ரேபிஸ் நோயால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இது உலகின் நாய்க்கடி வழக்குகளில் 36 சதவீதம் ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO)அறிக்கையின்படி, உலகிலே நிகழும் அதிக ரேபிஸ் இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில், 30 முதல் 60 சதவீதம், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாகும். ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரையிலான 7 மாத காலத்தில் 14.50 லட்சத்துக்கும் அதிகமானோர் விலங்குகள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த தகவலின்படி, 2019 ஆம் ஆண்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை சுமார் 1.2 கோடியாக இருந்தது. இதில், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா லாக்டவுன் காலத்தில் தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில், கடந்த 2018 ஆம் ஆண்டில் 75,66,467 பேரும், 2019-ல் 72,69,410 பேரும். 2020-ல் 47,580,41 பேரும், 2021-ல் 32,35,595 பேரும். 2022-ல் 21,80,185 பேரும். 2023-ல் 27,59,758 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2018 ஆம் ஆண்டில் 7,70,979 பேரும், 2019-ல் 8,31,044 பேரும். 2020-ல் 7,66,988 பேரும், 2021-ல் 3,23,190 பேரும் 2022-ல் 3,64,210 பேரும். 2023-ல் 4,04,488 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேறு ஒருவருடன் சேட்டிங்.. ஆத்திரத்தில் காதலி குத்திக்கொலை.. தலைமறைவான காதலன் சிக்கியது எப்படி..?