கோயம்பேட்டில் ஒரு டைடல் பார்க்.. தமிழக அரசின் அசத்தல் ப்ளான்...
சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் பொதுப் போக்குவரத்தின் மையமாகவும் திகழ்ந்தது கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம்.
சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் பொதுப் போக்குவரத்தின் மையமாகவும் திகழ்ந்தது கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம். அது மூடுவிழா காண்பதால் அந்த இடத்தில் பல்வேறு புதிய வசதிகளுடன் அதிநவீன திட்டங்களுக்கு தயாராகி வருகிறது தமிழக அரசு..
25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சென்னை பாரிமுனை அருகே பிராட்வே பகுதியில் தான் வெளியூர் பேருந்துகள் செயல்பட்டு வந்தன. தென்மாவட்டங்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்வது என்றால் பிராட்வே-வுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. அங்கு உச்சநீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை, பல்வேறு சந்தைகள் என நெரிசல் அதிகரித்தது. போதாக்குறைக்கு சென்னை அண்ணாசாலை வழியாகவே வெளியூர் பேருந்துகளும் பயணப்பட வேண்டி இருந்ததால் அண்ணாசாலை எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. இதனால் புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கான தேவை உருவானது.
இதையடுத்து 1999-ம் ஆண்டு சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையத்திற்கு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். 37 ஏக்கர் பரப்பளவில் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அந்த பிரமாண்ட பேருந்து நிலையத்தை 2002-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆசியாவிலேயே 2-வது பெரிய பேருந்து நிலையம் என்ற சிறப்புடன் சென்னையின் புதிய அடையாளமாக மாறிப்போனது கோயம்பேடு. இங்கிருந்து புறப்படும் பேருந்துகள் அண்ணாசாலைக்கு மாற்றாக மதுரவாயல் வழியாக தாம்பரம் செல்ல முடியும் என திட்டமிடப்பட்டது. அதேபோன்று நேரடியாக சென்னைக்குள் வராமல் தாம்பரம் பைபாஸ் வழியாக மதுரவாயல், கோயம்பேடு என வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு ஆணவம் விமர்சனம்.. ஆளுநரை கண்டுகொள்ளாத பெருந்தலைகள்.. பொங்கி எழுந்த திமுக எம்.பி!
அப்பாடா ஒருவழியாக புறநகர் பேருந்து நிலையம் வந்ததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும் என நிம்மதி பெருமூச்ச விட்டால், எதிர்பாராத திருப்பமாக தென்சென்னை திடீர் வளர்ச்சி கண்டது. தகவல் தொழில்நுட்பத்துறை அதாவது ஐ.டி. நிறுவனங்கள் தரமணி, வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, நாவலூர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் திடீரென குவிந்தன. இதனால் லட்சக்கணக்கானோர் அங்கு குடியேறியும், தாம்பரம் பகுதி வழியாக பயணிக்கவும் ஆரம்பித்தனர். விளைவு, கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட பேருந்துகள் தாம்பரம் தாண்டுவதற்கே தண்ணி குடிக்க ஆரம்பித்து விட்டன.
இது சரிப்பட்டு வராது என்று யோசித்த அரசு, அண்ணாசாலை, தாம்பரம் பைபாஸ், வண்டலூர் ஆகியவை சந்திக்கும் கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை உருவாக்க திட்டமிட்டது. 2018-ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கின. 60 ஏக்கர் பரப்பளவில் 394 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம், 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டது. இன்னும் கிளாம்பாக்கத்திற்கு ரயில் நிலையமோ, மெட்ரோ ரயில் நீட்டிப்போ செய்யப்படவில்லை. அவை முழுமை பெறும்பட்சத்தில் கிளாம்பாக்கம் சிறப்பாகவே செயல்படும்.
ஆனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்தது. பசுமைப் பூங்காவாக மாற்றலாம் என யோசித்தால் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அதாவது 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் பிரமாண்ட பூங்கா உருவாக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே கோயம்பேட்டில் கலாச்சார, வணிக மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் தொகுப்பை உருவாக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக தரமணி பகுதியில் அமைந்துள்ளது போன்று ஐ.டி.நிறுவனங்களை அனுமதிப்பது என்றும் அதன் வாயிலாக அந்த இடத்தை வணிக கேந்திரமாக உருவாக்கலாம் எனவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டு வருகிறதாம். விரைவில் கோயம்பேட்டில் ஒரு குட்டி டைடல் பார்க்கை எதிர்பார்க்கலாம்..
இதையும் படிங்க: ஆணவம் நல்லதல்ல.. முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநர் மாளிகை அட்டாக்!