பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுட்டுக்கொலை; மர்மம் நீடிப்பு...
பஞ்சாபில் 'ஆம் ஆத்மி' எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை; தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்ததா? மர்மம் நீடிப்பு..
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சுத்தம் செய்த போது திடீரென துப்பாக்கி வெடித்ததால் குண்டு பாய்ந்து இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த மர்மமான சூழ்நிலையில், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர்தான் உண்மையான காரணம் தெரியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு லூதியானா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர், குருபிரீத் கோகி. வயது 58. நேற்று இரவில் மர்மமான முறையில் உடலில் குண்டு பாய்ந்து வீட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை அருகில் உள்ள தயானந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழிவிலேயே பரிதாபமாக அவர் உயிர் பிரிந்து விட்டது.
இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை
நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பலியான எம்எல்ஏ வீட்டில் தனி அறையில் இருந்ததாகவும், துப்பாக்கியை சுத்தம் செய்த போது எதிர்பாராமல் வெடித்ததால் அவர் உடலில் குண்டு பாய்ந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் தான் உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி தெரிய வரும் என்று தெரிவித்தனர்.
பலியான எம்எல்ஏ கோகி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, மேற்கு லூதியானா தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் அஷு என்பவரை 7500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அவர் கடைசியாக தன்னுடைய முகநூல் பதிவில் பஞ்சாப் சபாநாயகர் குல்தார் சிங் சத்துவான் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சாந்த் பாபா பல்பீர் சிங் ஆகியோரை சந்தித்து குடிநீர் பிரச்சினை பற்றி விவாதித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் பி ஆர் எஸ் நகரில் உள்ள ஷீட்ல மாதா கோவிலுக்கு சென்று அந்தக் கோவிலில் சமீபத்தில் திருட்டுப் போன 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் குறித்து விசாரித்ததாகவும், பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன் கோவில் பூசாரி நிர்வாகத்தினர் மற்றும் குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் முகநூலில் அவர் பதிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து போலீஸ் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு பேசி விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், சபாநாயகர் உடன் லூதியானா வக்கீல்கள் சங்க நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்ற தகவலையும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணிக்கு "அடிமேல் அடி": டெல்லி தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்; அகிலேஷ் யாதவுடன் மம்தாவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு