இனிமேல் இப்படி நடக்கக்கூடாது! பஹல்காம் தாக்குதலுக்கு 'AK' கண்டனம்.. விருது பெற்ற கையோடு அஜித் அட்வைஸ்..!
எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த சூழலில், சாதி மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக் கொள்ளவேண்டும் என நடிகர் அஜித் குமார் தெரிவித்தார்.
கல்வி, வணிகம், கலை, மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரைகளை பத்ம விருது கமிட்டி பரிசீலித்து, பிரதமர், ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின், குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதிக்கு முன்தினம் அறிவிக்கப்பட்டு ஏப்ரலில் விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு, 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த விழாவில், முதற்கட்டமாக 71 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும்.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் 10 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழ் நடிகர் அஜித் குமார், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, முன்னாள் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில், அஜித்குமார் சகோதரர் ரிச்சர்ட், மனைவி ஷாலினி மற்றும் மகள், மகன் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு.. இந்தியாவின் முடிவால் அலறும் பாகிஸ்தான்..!
விருது பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அஜித்குமார், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என்றும், சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அஜித் குமார், அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆயுதப்படையைச் சேர்ந்த பலரை நேரில் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்காக நாம் அனைவரும் அவர்களை வணங்குகிறோம். அவர்கள் கடினமாக உழைப்பதால்தான் நாம் நிம்மதியாக உறங்குகிறோம். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வேண்டும்.
நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்காக அயராது உழைக்கிறார்கள். அவர்களின் மரியாதைக்காகவாவது, ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரின் மதத்தையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் நம் நாட்டுக்குள்ளேயாவது சண்டை வேண்டாம். அமைதியான சமூகமாக நாம் இருப்போம். இந்த சூழலில் சாதி, மதம் என்ற வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும் என நடிகரும் கார் ரேசருமான அஜித் குமார் கூறினார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: 2 நாளில் 9 பயங்கரவாதிகள் வீடு இடிப்பு.. 14 பேர் யார்? பெயர் பட்டியல் வெளியீடு..!