அடி தூள்..!டெல்லி பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய்,:காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாதம்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் உதவி பணமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
"பியார் தீதி யோஜனா" (அன்புச் சகோதரி) திட்டத்தின் கீழ் இந்த உதவிப் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கிவிட்டன.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்கான பியாரி தீதி (அன்புச் சகோதரி) யோஜனா திட்டத்தை வாக்குறுதியாக அளித்துள்ளது.
இதையும் படிங்க: பிரியங்காவின் கன்னங்களைப் போன்ற பளபளப்பான சாலை: டெல்லி பாஜக வேட்பாளரின் 'கவர்ச்சி' வாக்குறுதியால் சர்ச்சை ; காங்கிரஸ் பதிலடி
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இந்த கவர்ச்சி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன் அடிப்படையில் தற்போது டெல்லியிலும் இதை அமல்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்த உதவித்தொகை திட்டத்தை வெளியிடும் விழாவில் கலந்து கொள்வதற்காக கர்நாடக மாநில துணை முதல் அமைச்சர் டி கே சிவகுமார் டெல்லி வந்திருந்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"டெல்லியில்காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பியாரி தீதி யோஜனா (அன்புச் சகோதரி திட்டம்) மூலம் பெண்களுக்கு ரூ,2500 வழங்கப்படும். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது போல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
கர்நாடகாவை போல் டெல்லியிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த திட்டம் செயல் படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த அறிவிப்பின் போது டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், பொறுப்பாளர் காஜி நிஜாமுதீன் மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். டெல்லியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் அவர்களை வசீகரிப்பதற்காக இந்த திட்டத்தை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மாநிலத்தின் "முக்கிய மந்திரி மகிளா சம்மன்" திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் இனி 2100 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
'ஹாட்ரிக்' வெற்றிக்கு முயற்சி
ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இருமுறை ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக 'ஹாட்ரிக்' வெற்றிக்கு அந்த கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டு தேர்தலில் 67 இடங்களிலும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 63 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 6 ஆம் தேதி அன்று தேர்தல் தேதி குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.