மராத்தியில் பேச மாட்டேன்.. ஏர்டெல் பெண் ஊழியர் அடாவடி.. மும்பையிலும் வெடித்தது தாய்மொழி சர்ச்சை..!
மராத்தியில் பேச மாட்டேன் என ஏர்டெல் பெண் ஊழியர் ஒருவர் அடாவடியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"வேற்றுமையில் ஒற்றுமை" என்பதற்கு ஏற்ப பல மொழி பேசும் பல இனங்களை கொண்ட மாநிலங்கள் ஒன்றாக இணைந்து இந்தியா உருவாகி இருக்கிறது.
ஆனால் இந்த மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதிலிருந்தே ஆங்காங்கே மொழிப் பிரச்சனை வெடித்தபடிதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போன்ற கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் இந்த உணர்வு அதிக அளவில் இருக்கும்.
அதே நேரத்தில் நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைவருக்குமே இந்தி மொழி தெரியும். இருப்பினும் பால் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதிக்கம் அங்கு தொடங்கிய பிறகு அங்கும் தாய்மொழி மராத்தியின் மவுசு அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே..! சரத் பவாருக்கு உதவிக்கரம் நீட்டிய மோடி..!
மும்பையின் சார்கோப் பகுதியில் உள்ள ஏர்டெல் சேவை மையம் ஒன்றிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். தனது ஏர்டெல் நெட்வொர்க் இணைப்பு தொடர்பான பிரச்சனையை நிவர்த்தி செய்யும்படி பேசத் தொடங்கியவர் தாய்மொழியான மராத்தியில் பேசிக்கொண்டு இருந்தார்.
ஆனால் மராத்தி மொழியில் பேசுவதற்கு சிரமப்பட்ட அந்த இளம் பெண் ஊழியர் தனக்குத் தெரிந்த இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அவர் அளிக்கும் பதில் வாடிக்கையாளரை கோபமூட்டியது. இந்தி மொழியை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத அந்த இளைஞர் மராத்தி மொழியிலேயே பேசும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் மிகவும் கோபம் அடைந்த அந்தப் பெண் ஊழியர் பதற்றத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டே, போனில் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருந்த படி "இந்தியாவில் எந்த மொழியிலும் பேசலாம்.." என்பது போல் மிகவும் அலட்சியமாக பேசியுள்ளார்.
இளைஞரும் சளைக்காமல் "நான் மராத்தி பேசமாட்டேன், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.
ஊழியர் உடனே அருகில் உள்ள கடைக்காரர்களே அழைத்த போது கடைக்காரர்கள் அங்கு வந்து இளைஞரை மிரட்ட தொடங்கினர்.
இந்த முழு சம்பவமும் வீடியோவில் பதிவாகி நாடு முழுவதும் வைரலாக பரவியது. மராட்டியத்திலும் தாய்மொழி பற்று வலுக்க தொடங்கியது. மாநிலம் முழுவதும் பலர் இந்த வீடியோவை பார்த்து கொந்தளித்தனர்.
சிவசேனாவின் தாக்கரே பிரிவு கட்சி தலைவர்களில் ஒருவரான அகில் சித்ரே நேரடியாக அந்த சேவை மையத்திற்கு சென்று ஊழியர்களை கடுமையாக எச்சரித்தார். இங்கு பணிபுரியும் ஊழியர்களின் 80 சதவீதம் பேர் மராத்தியர்கள் ஆக இருக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக வலியுறுத்தினார்.
இந்தக் கட்சியினருடன் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பெண் ஊழியரின் அடாவடி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் பிரச்சினையை கவனிக்காததற்காக ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என்றும் இந்த இரு கட்சிகளும் மிரட்டல் விடுத்துள்ளன.
அதைத்தொடர்ந்து அவர்களும் எதிர்ப்பு வீடியோக்களை தற்போது பதிவிட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் மொழி பிரச்சனை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டி இருக்கிறது. குறிப்பாக அரசு மராத்திய மொழிக்கு அழுத்தம் கொடுத்த பிறகு இந்த பெண் ஊழியரின் அலட்சிய நடவடிக்கை மகாராஷ்டிராவில் உணர்திறன் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பிள்ளது.
இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க்… விரைவில் இந்தியாவில் ஸ்டார் லிங்க்!!