×
 

நான் தோற்றுப்போன அரசியல்வாதியா..? கமல் சொன்ன அந்த உண்மை... விஜய் ரசிகர்கள் ஆவேசம்..!

கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.

''20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அதுதான் என் தோல்வி'' என மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் வருத்தப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி 8ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், "நான் 20 வருடத்திற்கு முன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வராததுதான் தோல்வி என நான் நினைக்கிறேன். அப்படி நான் வந்து இருந்தால் நான் நின்று பேசி இருக்க வேண்டிய இடம் மாறி இருக்கும். கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.

`என் சிந்தனையும், கலையும் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் தமிழ் மக்கள். உங்கள் அன்பு என் உறவாக இருந்துகொண்டிருக்கிறது. தமிழ் நம்மை இணைக்கிறது. இன்று உலக தாய்மொழிகள் தினம். இதை கொண்டாடுவதற்கு வேறு சிறந்த தருணம் இருக்க முடியாது.

இதையும் படிங்க: மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் வைத்த செக்... ஆதவ் அர்ஜுனாவிற்கு பறந்த அதிரடி உத்தரவு...!

நமது மொழியின் குரல்வளையைப் பிடிக்க நினைப்பவர்கள் இது எப்படிப்பட்ட தினம் என்பதை உணர வேண்டும். நான் பேசினால், வேண்டியவர்களும், விமர்சகர்களும், எதிர்க்கட்சிக்காரர்களும் தோற்றுப்போன அரசியல்வாதி பேசுகிறார் என்று கூறுவது உண்டு.

குறைந்தது 20 வருடங்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வர தவறிவிட்டேன் என்பது எனக்கு தோல்வியாகத் தெரிகிறது. அப்படி வந்திருந்தால், இன்று நான் பேசும் வார்த்தைகளும், இடமும் வேறாக இருந்திருக்கும். நம் பணி கடைசி ஒரு வாக்காளன் இருக்கும் வரை தொடரும்.

எனக்கு காந்தியைப் பிடிக்கும் அளவுக்குப் பெரியாரையும் பிடிக்கும். பெரியாரே காந்தியின் சிஷ்யர்தான். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த நிறைய ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை என் அனுபவத்தில் நான் புரிந்துகொண்டேன்.

நாம் இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதாகக் கூறமாட்டேன். ஹிந்தியைத் திணிக்க முயன்றதை தடுத்த தமிழர்கள் நரைத்த தாடியுடன் இன்றும் இருக்கிறார்கள். மொழிக்காக தமிழர்கள் உயிரைக் கொடுத்துள்ளார்கள். இதைப் போன்ற விஷயங்களுடன் விளையாட வேண்டாம்.

தனக்கு எந்த மொழி தேவை, எந்த மொழி தேவையில்லை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு. இன்று எட்டாம் ஆண்டில் நின்றுகொண்டிருக்கிறோம். நாம் வளர்த்த குழந்தைக்கு 8 வயதாகிவிட்டது. இந்த வருடம் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது.

மய்யத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எது விருப்பதிற்குரியதாக இருக்கிறதோ அதை கற்றுக் கொடுக்கவேண்டுமே தவிர, நான் சொன்னதை நீ கற்றுக் கொள்ளவில்லை என்றால் உன் கைசெலவுக்கு காசு தரமாட்டேன் என்று கூறும் அரசு எந்த நிலைக்கு தள்ளப்படும் என்பதை சரித்திரம் சொல்லும்’ என்றார்.

இந்நிலையில், ''ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்'' என கமல் கூறியதை, நாம் தமிழர் கட்சியினர் மேற்கோள்காட்டி, விஜய்க்கு சுட்டிக்காட்டி, ''கமலுக்கு புரிந்தது. 2026ல் ஒருத்தருக்கு புரியும். புரிய வைப்போம்'' என கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுத்து வரும் விஜய் ஆதரவாளர்கள், ''ஒரு திருத்தம்..  நடிப்பின் உச்சத்தில் இருந்து வருவதற்கும், காலம் போன காலத்தில் வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு கமல்- விஜய் வேறுபடுகின்றனர்'' என பதிலளித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அஞ்சலை அம்மாளுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்..! படப்பிடிப்பு இடைவேளையில் கொஞ்சம் அரசியல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share