மீண்டும் செருப்பு அணிய இவர் தான் காரணம்! திமுக ஆட்சி அகற்றப்படும்.. அண்ணாமலை நம்பிக்கை..!
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் ஏற்ற அண்ணாமலை மீண்டும் செருப்பு அணிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் தாக்குதல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது, பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக மீது கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்று அறிவித்தார். அதோடு செய்தியாளர் சந்திப்பின் போதே தான் அணிந்திருந்த ஷூவையும் கழற்றினார்.
அதன்பிறகு பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை செருப்பு அணியாமல் வெறும் காலில் வந்தார். இந்த நிலையில் பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரன் கட்டளைக்கு இணங்க செருப்பு அணிந்துக் கொண்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் பணியே மகேசன் பணி! புது உத்வேகத்தில் நயினார் நாகேந்திரன்…
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பு ஏற்ற பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலை காலில் செருப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் இனி காலில் செருப்பு அணிய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் என்றார். ஏனெனில் 2026 மே மாதம் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்பதால் அண்ணாமலை இன்றே காலணி அணிந்து கொள்ளலாம் என்றும் வலியுறுத்தினார்.
நயினார் நாகேந்திரன் அப்படி சொன்னதோடு மட்டுமில்லாமல், அண்ணாமலைக்கு செருப்பையும் மேடையிலேயே வழங்கி இருந்தார். செருப்பை நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் வழங்க அதனை மறுக்காமல் அண்ணாமலை ஏற்று அணிந்து கொண்டார்.
இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை, 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், மாநில தலைவர் சொல்வதை கேட்பது தனது கடமை என்றும், மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன்., நிச்சயமாக தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு திமுக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று கூறி அண்ணாமலை, தற்போது செருப்பு அணிந்திருப்பது பேசுப் பொருளாகவே மாறிவிட்டது.
இதையும் படிங்க: நயினார் கேட்டுக்கொண்டதால் மனமிறங்கிய அண்ணாமலை... காற்றில் பறக்கவிடப்பட்ட சபதம்!!