பெரியாரா? பிரபாகரனா? மோதிப் பார்த்துவிடலாம் - சீமான் ஆவேசம்....
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
கண்டனம் தெரிவிக்கும் விதமாக மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியார் கூட்டமைப்பினர் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே சீமான் வீடு அருகே குவிந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்தார் சீமான். அப்போது பல்வேறு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் ஆவேசமாக பதிலளித்தார்.
"" பெரியார் குறித்து கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை நான் உடைத்து விட்டதால் என்மீது இப்போது அவதூறு பரப்புகிறார்கள். தலைவர் பிரபாகரன் அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் போலி என 15 ஆண்டுகள் கழித்து பேச வேண்டிய தேவை என்ன? இத்தனை ஆண்டுகளாக அவருக்கு பல்வலி இருந்ததா? பேச முடியாமல் இருந்தாரா? வெங்காயம் என்ற படம் எடுத்தால் வெங்காயங்களுக்கு ஆதரவாக அவர் பேசுகிறார். ஆனந்த விகடனில் முதன்முதலில் இந்த புகைப்படம் வந்தபோது ஏன் அப்போது இதுபற்றி கேள்வி எழுப்பவில்லை.
தமிழுக்கும், தமிழர்களுக்கு பெரியார் செய்தது என்ன?. பெரியாரால் தமிழர்கள் பெற்ற பலன்கள் என்ன? படிக்க வைச்சது காமராஜர், குடிக்க வைச்சது திராவிடம்.. பேரறிஞர் அண்ணாவை, நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரை பெரியாரா படிக்க வைத்தார்?. தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுங்கள் என்றார் பெரியார், கலந்து எழுதுங்கள் என்றார் பெரியார். நான் புதிதாக எதையும் பேசிவிடவில்லை. நான் பேசியது எல்லாமே பெரியார் பேசியது தான். நான் பேசியது தவறு என்றால், பெரியார் பேசியது..
இதையும் படிங்க: 'மெயின்தான் வரணும்... பிராஞ்ச் எல்லாம் வரக்கூடாது… என்னடா காமெடி பண்றீங்க..?': கடுப்பான சீமான்..!
உன் பொண்டாட்டி என்ன உப்பு, புளி, மிளகாயா என்று கேட்டவர் பெரியார். அவளுக்கு பிடித்தவன் கூட அவள் போனால் உனக்கு என்ன? உன் வீட்டு அடுப்படியில் உள்ள உப்பு, புளி, மிளகாயா அவள் என்று சொன்னவர் பெரியார். இங்குள்ள இஸ்லாமியர்களை துலக்கர் என்று நொடிக்கொருதரம் சொன்னவர் பெரியார். நீ என்ன இந்த நாட்டுக்காரனா? பாகிஸ்தானுக்குப் போ, ஆப்கானிஸ்தானுக்குப் போ என்றவர் பெரியார். காந்தி போன்ற மகானை சுட்டுக் கொன்றுவிட்டார்களே என்று ஒருநாள் பேசியிருப்பார், நாடெங்கும் உள்ள காந்தி சிலைகளை இடிக்க வேண்டும் என்று மறுநாள் பேசியிருப்பார். இதில் நான் எதை எடுத்துக் கொள்வது?
நாம் தமிழர் கட்சியின் பெயரை சோ, குருமூர்த்தி ஆகியோரின் காலில் விழுந்து வாங்கியதாக நான் அண்ணன் என்று மதிக்கும் கொளத்தூர் மணி பேசியுள்ளார். இதற்கு சான்று இருக்கிறதா? பெரியார் குறித்து நான் பேசியதற்கு ஆதாரம் கேட்பவர்கள், இந்த பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா? நான் தலைமறைவாக இருந்தபோது கைதுக்கு பயந்து தலைமறைவு என்று சட்டசபையில் பேசப்பட்டது தனக்கு வருத்தமாக இருப்பதாக எனது தாயார், கொளத்தூர் மணியை சந்தித்து சீமானை சரண் அடையச் சொல்லுங்கள் என்றார். இதுதான் நடந்தது.
கள் இறக்கும் மாநாட்டினர் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார்கள். நானும் பங்கேற்றேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றார். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிடம் தளர்ச்சி அடைந்து விட்டது, நாம் தமிழர் எழுச்சி பெற்று விட்டது. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி நாம் தமிழர். 2026-க்கு பிறகு பாருங்கள் தமிழ்நாட்டில் திராவிடம் இருக்காது.
தமிழ்நாட்டில் நான்தான் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளேன். மக்களுடன் கூட்டணி. நான் தலைவர்களை நம்பி வரவில்லை, தமிழர்களை நம்பி வந்துள்ளேன். என் மக்களை நான் நூறு விழுக்காடு முழுமையாக நம்புகிறேன். அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள். நான் தனித்து நிற்பேன். என்னை அச்சுறுத்த முடியாது. இனச்சாவில் இருந்து எழுந்து வந்தவன் நான்.
14 ஆயிரம் பேர் ஆசிரியர் பணி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியம் தரப்படவில்லை. இதற்கெல்லாம் நிதியில்லை. ஆனால் கருணாநிதி கட்டுமானங்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் எங்கிருந்து வருகிறது பணம்?
பெரியார் குறித்து நான் பேசியதற்கு பெட்டிக்கடைகள் எல்லாம் ஏன் துடிக்கின்றன. ஹோல்சேல் கடை வைத்துள்ள வீரமணி பேசட்டும். திருமுருகன் காந்தி போன்றோர் எழுப்பும் கேள்விகளுக்கு என் தம்பிகள் பதில் அளிப்பார்கள்.""
பெரியார் குறித்த தனது எதிர்மறை கருத்துகளை சீமான் தொடர்ந்து பேசி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் பெரியாரை 'உடைக்கும்' சீமான்... தலையில் வைத்து கொண்டாடும் துக்ளக் குருமூர்த்தி!