×
 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறது... அதிமுக வழியில் அண்ணாமலை அதிரடி!

வரும் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல், திமுகவை முழுமையாக அகற்ற இருக்கும் தேர்தல் என்பதால் இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணமடைந்ததையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தேர்தலைப் புறக்கணிக்கப்பதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்தன. இந்நிலையில் பாஜகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை கடந்த 4 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அனைத்து துறையிலும் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் என, இருண்ட காலத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு சட்டத்துக்கு நேர் எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் அவலங்களை தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், ‘இது திராவிட மாடல் இல்லை, பேரிடர் மாடல்’ என்று உரக்க சொல்லத் தொடங்கிவிட்டனர்.


ஈரோடு கிழக்கில் நடக்க இருப்பது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023 இடைத்தேர்தலின்போது, மக்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதை பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல், திமுகவை முழுமையாக அகற்ற இருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளை போல பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பவில்லை.

இதையும் படிங்க: ராமநாதபுரம் கொடுத்த பாடமே போதும்யா...! ஈரோடு கிழக்கில் ஓரமாய் 'ஒடுங்கும்' ஓ.பி.எஸ்..!

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்து ஆலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவதே எங்கள் இலக்கு” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தவெக ஏற்கனவே 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் இலக்கு என்று அறிவித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சி ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்கக்கூடும்.

 

இதையும் படிங்க: தேர்தல் புறக்கணிப்பு ஏன்? எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அமைச்சர் அர்ச்சணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share