இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சும்மாவா.? டெல்லி தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட பாஜக!
பெண்களுக்கு மாதம் ரூ.2500, கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் - பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கவர்ச்சிக்கரமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்காளர்களைத் திணறடித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவும் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "பாஜக தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்ட ஜெ.பி. நட்டா, 2025-ம் ஆண்டுக்கான வளர்ந்த டெல்லிக்கான பாஜகவின் தீர்மானம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். இன்று அதன் இரண்டாம் பகுதி வெளியிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு இடைத்தரகர்களை ஒழித்துள்ளது. ஊழல் விஷயத்தில் மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது. ஏழை மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் கே.ஜி முதல் பி.ஜி வரை இலவசக் கல்வி வழங்கப்படும். டெல்லி இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக ரூ.15,000 நிதி உதவி வழங்கப்படும்.
டெல்லியை வளர்ச்சியடையச் செய்வதே பாஜகவின் நோக்கம். இதற்கான சாதனை பயணத்தை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வோம்" என அனுராக் தாகூர் தெரிவித்தார். முன்னதாக ஜெ.பி. நட்டா வெளியிட்ட முதல் கட்ட தேர்தல் அறிக்கையில், " மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி, தீபாவளிக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
எதிர்கட்சிகள் தேர்தலில் இலவச வாக்குறுதிகள் அளிப்பதற்கு பிரதமர் மோடியும் பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மற்ற கட்சிகளை போல பாஜகவும் இலவச வாக்குறுதிகளை அளித்து வருகிறது. டெல்லி தேர்தலிலும் அது வெளிப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி! வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பாஜக: கெஜ்ரிவால் கிண்டல்