உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்... யார் இவர்?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்தவர் பி. ஆர். கவாய். சமூக ஆர்வலரும் முன்னாள் கேரள மற்றும் பீகார் மாநில ஆளுநரான ஆர்.எஸ்.கவாயின் மகன்தான் இந்த பி.ஆர்.கவாய். மகாராஷ்டிர உயர்நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞராக இருந்த அவர், 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். 1987 முதல் 1990 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். அதன் பிறகு, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர், தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2005 ஆம் ஆண்டும் நிரந்தர நீதிபதியாகவும் பொறுப்பேற்றார். 2019 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியானார். உச்சநீதிமன்றம் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளின் பகுதியாக பி. ஆர். கவாய் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: பிச்சையெடுக்கும் பாகிஸ்தான்... இந்தியாவில் அதிகரிக்கும் பலத்தால் படை நடுங்கும் 3.1/2 எதிரிகள்..!
இந்த நிலையில் இவர் தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருக்கிறார். அவரது பதவிக்காலம் மே 13 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டத்துறை அமைச்சகம் புதிய தலைமை நீதிபதி குறித்து பரிந்துரையைத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் கோரியிருந்தது.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக கவாயை நியமிக்க மத்திய அரசுக்குத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்குத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது பரிந்துரையை அளித்துள்ளார். சஞ்சீவ் கண்ணா மே 13 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், அதற்கு மறுநாள் மே 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்பார். வரும் நவம்பரில் கவாய் ஓய்வு பெறும் நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு மட்டுமே அவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக அவர் இருப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் கோழிக் கழுத்தை வெட்டத் துடிக்கும் சீனா.. வங்கதேசத்துடன் இணைந்து சதி..!