×
 

தங்கத்தை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியுமா? வாங்க முடியாதா?..

கடந்த 10 ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது

ஆதி காலந்தொட்டு மனித குலத்தை ஈர்க்கும் விஷயங்களில் தங்கத்திற்கும், வெள்ளிக்கும் தனியிடம் உண்டு. சூரியனைப் போல், சந்திரனைப் போல் இருக்கும் இந்த இரண்டு தனிமங்களை அவற்றின் பிரதிபலிப்பாகவே பார்க்கிறது மனித மனம். அதனால் தான் எத்தனையோ பொருட்களுக்கு மவுசு மாறிவிட்ட நிலையில், இன்றளவும் தங்கம் என்பது பிரமிப்பாகவே இருந்து வருகிறது.

ஒரு வீட்டின் செல்வத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. எவ்வளவு நகைகள் கையிருப்பில் உள்ளதோ அந்த அளவுக்கு அந்த குடும்பம் வளமான குடும்பமாக பார்க்கப்படுகிறது. இது நாட்டிற்கும் பொருந்துகிறது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் எடையை பொறுத்து அதன் கடன் வாங்கும் சக்தி, பணத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. 

நிலத்தில் முதலீடு செய்வதற்கு லட்சங்கள் முதல் கோடிகள் வரை தேவைப்படும். எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. ஆனால் ஆயிரம் முதல் லட்சங்கள் வரை புரட்டினால் போதும், ஒரு கிராம் தங்கம் முதல் எத்தனை சவரன் நகைகள் வேண்டுமானாலும் வாங்கி விடலாம். மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீடாக இந்திய சமூகத்தால் தங்கம் பார்க்கப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் உடனடியாக அதனை பணமாக மாற்ற முடியும் என்பது இதன் கூடுதல் பலன்களுள் ஒன்று. நிலமாக இருந்தால் விற்பது வரை காத்திருக்க வேண்டும், சந்தை விலையில் அது தகைய வேண்டும். ஆனால் தங்கம் அப்படியல்ல. அடுத்த நொடியே பணமாக்கலாம். அதேபோன்று ரொக்கமாக வைப்பதற்கு பதில் நகைகளாக, நாணயங்களாக தங்கத்தை வைக்க முடியும் என்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக மாநில நிர்வாகி போக்சோவில் கைது! 

சுதந்திரத்திற்கு முன்பாக தங்கம் முக்கிய சந்தைப்பொருளாக ஆட்சியாளர்களால் கையாளப்படவில்லை. விடுதலைக்குப் பிறகு நாட்டின் மறுகட்டுமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அப்போதும் அதன் விலை என்பது மிகச்சிறிய அளவிலேயே இருந்தது. 1962-ல் நடைபெற்ற முதலாவது சீனப்போர் மற்றும் 1971-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடி தங்கத்தின் பக்கம் ஆட்சியாளர்களின் கவனத்தை திருப்பியது. 1964-ல் வெறும் 63 ரூபாய்க்கு ஒரு சவரன் தங்கத்தை வாங்கிவிட முடியும். 1974-ல் அது 506 ரூபாயாக அதிகரித்தது. 

1990-களில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளாமய கொள்கைக்குப் பிறகு தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இன்றைய தேதிக்கு தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் சக்தியாக ஒருசில காரணிகள் உள்ளன. பணவீக்கம் அதிகரிக்கும்போதும், வரிகள் உயரும்போதும், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், தேவை மற்றும் உற்பத்தியில் ஏற்படும் இடைவெளி போன்றவை தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. 

கடந்த 10 ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,340 ஆகும். இதேபோன்று வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதேதிசையில் பயணித்தால் வெகு விரைவில் தங்கம் 60 ஆயிரம், 70 ஆயிரம் என எட்டா உயரத்தில் சென்று விடும் அபாயம் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை இனி வாங்க முடியுமா? வேடிக்கை மட்டும் பார்க்க முடியுமா? என்பது கேள்விக்குறியே..
 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share