×
 

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்... சொல் பேச்சு கேட்க மாட்டீர்களா என நீதிமன்றம் ஆவேசம்..!

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரியில் தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரியில், தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, கல்லூரி நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் அருள் முருகன் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். ஆனால், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு, சுயநிதி கல்லூரிகள் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதை தடுக்கும் வகையில், ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூறி 2013ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உச்ச நீதிமன்றமும், அந்த உத்தரவை உறுதி செய்துள்ள நிலையில், தமிழக அரசு தேவையில்லாமல் இந்த மேல்  முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: தமிழக அரசு உடனான மோதல் தணிந்ததா..? ஆளுநர் காட்டிய கிரீன் சிக்னல்..!

ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இந்த அபராதத்தொகையில், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எதிர்மனுதாரர் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவருக்கும், மீதத்தொகையை சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் 15 நாட்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தனி தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அபராதத்தொகை செலுத்தப்பட்டது குறித்து மார்ச் 20 ம் தேதி அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் சாலை அமைக்க மாட்டோம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share