தீரன் படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்..! சென்னையில் கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா கொள்ளையர்கள்..!
சென்னையில் ரூம் எடுத்து தங்கி தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையர்களை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. வயது 51. இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் காலையில் பணிக்கு கிளம்பி சென்று விடுவதால் பெரும்பாலும் இவர்களது வீடு பூட்டியே கிடக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வேலைக்கு கிளம்பி சென்று விட்டனர். மதியம் ஒரு மணி அளவில் உறவினர்கள் இவர்களது வீட்டை பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பெயரில் வேலைக்கு சென்று இருந்த மாரிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 58 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தார். பதறிப்போன மாரிமுத்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் சந்தேகப்படுபடியாக சுற்றித்திரிந்த நபர்களின் புகைப்படங்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து விசாரித்தனர். எனினும் கொள்ளையடித்தவர்கள் யார் என துப்பு துலங்கவே இல்லை. அதே பகுதியில் சில வடமாநிலத்தவர்கள் சுற்றிவருவதை பார்த்த போலீசார் அவர்களின் புகைப்படங்களை எடுத்து வெளி மாநில போலீசாருக்கு அனுப்பி பல்வேறு தரவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தேவநாதன் யாதவ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!
விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 15 ஆம் தேதி வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் சென்று சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். ஆனால் அவர்கள் போலீஸ் வருவது அறிந்து முன்கூட்டியே அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வீட்டில் சம்மன் கொடுத்து விட்டு போலீசார் அங்கே காத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சென்னை வந்து மீண்டும் திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சென்னை திரும்பிய போலீசார், நேற்று பெரம்பூர் ரயில் நிலையத்திற்கும் வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் மகாராஷ்டிரா மாநிலம் பூனே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் நந்தகுமார். வயது 27. சந்திரகாந்த் ஆனந்த் மானே. வயது 32. ஸ்ரீகாந்த் ஆனந்த் மானே. வயது 27 என்பது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரும் கடந்த ஆண்டு கொள்ளை சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புனைவிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து சென்ட்ரல் பகுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களில் நோட்டமிட்டுள்ளனர். அப்பொழுது வியாசர்பாடி சம்பவம் நடந்த வீட்டில் இரண்டு நாட்கள் நோட்டமிட்டு தினமும் வீட்டை பூட்டிவிட்டு கணவன் மனைவி இருவரும் வெளியே செல்வதை கண்டு குறிப்பிட்ட வீட்டில் கொள்ளை அடித்து 58 சவரன் நகைகளுடன் சொந்த ஊருக்கு சென்றது தெரிய வந்தது.
மேலும் அங்கு இவர்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் கொள்ளையடித்த நகைகளை 24 லட்சம் ரூபாய்க்கு விற்று, அதில் 14 லட்சம் ரூபாய் மட்டும் பெற்று மூன்று பேரும் பிரித்துக் கொண்டுள்ளனர். மீதி பணத்தை நகைகளை விற்று பிறகு தருவதாக கூறிவிட்டு சென்ற நபர்கள் இவர்களிடம் குறிப்பிட்ட அந்த பணத்தை தராமல் ஏமாற்றியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனை யடுத்து கைது செய்யப்பட்ட மூன்று வட மாநில நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் இருந்து நகைகளை வாங்கி திருடர்களையே ஏமாற்றிய மேலும் இரண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலனை தேடிச் சென்ற 14 வயது சிறுமி..! அறையில் அடைத்து வைத்து பலாத்காரம்..! 3 நாட்கள் அனுபவித்த சித்ரவதை..!