லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புற கதையெல்லாம் வேண்டாம் அன்ணாமலை.. பங்கம் செய்த காங்கிரஸ் எம்.பி.!
உங்களுக்கும் சேர்த்துதான் இந்தத் தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் பதிலடிக் கொடுத்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் சமூக வலைத்தளத்தில் வாக்குவாதம் நீண்டுகொண்டே செல்கிறது. மும்மொழிக் கொள்கை தொடர்பாக சசிகாந்த் வெளியிட்ட பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர் வினையாற்றியிருந்தார். அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கதில், "ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.
நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதுதானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி தி.மு.க.வுக்கும் வெட்கமில்லை. இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்?
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து தி.மு.க.,வினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.,வைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா?" என்று அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு சசிகாந்த் செந்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புற கதை எல்லாம் இங்க வேண்டாம் மெத்தப் படித்த அண்ணாமலை அவர்களே, நான் உங்களிடம் UPSC-CSAT தேர்வு குறித்து நியாயமாக கேட்ட எந்தக் கேள்விக்கும் உங்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால் தான் ரிவர்ஸ் கியர் போட்டு என்னென்னமோ பேசி கொண்டிருக்கிறீர்கள், இதன் மூலம் நான் கேட்ட அனைத்து நியாயமான கேள்விகளையும் நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா?
அதற்கு நீங்களும் உங்கள் தலைமையும் தான் தமிழ்நாடு மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். UPSC -CSAT தேர்வின் மூலம் நடத்தப்படும் அநீதிக்கு தமிழ்நாடு மாணவர்களிடம் உங்களால் மன்னிப்பு கேட்க முடியுமா? இந்தத் தேர்வினால் எலைட் கோச்சிங் சென்டர் மட்டுமே பயன் அடைகிறது. ஆனால், ஒரு புறம் பல லட்சக்கணக்கான கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உங்களால் மன்னிப்பு கேட்க முடியுமா? உங்களின் நீட் தேர்வு திணிப்பால் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மரணத்திற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள், அவர்களிடம் எப்போது நீங்கள் மன்னிப்பு கேட்க போகிறீர்கள்?
சரி, நீங்கள் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பேசுகிறீர்கள். அதை உங்கள் ஒன்றிய அமைச்சர் ஒப்புக் கொள்வாரா? அதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவாரா? குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் (Double Engine Sarkar States) அதை முதலில் செயல்படுத்த முடியுமா? அப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் இது கட்டாயமாக செய்ய வேண்டும் என நீங்கள் சொல்வதற்கு காரணம் என்ன?
இதையும் படிங்க: திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.!
ஒன்றிய அமைச்சர்கள், பாஜக எம்பிகள் பாஜக முதலமைச்சரின் மகன்கள் / மகள்களில் எத்தனை பேர் நீங்கள் சொல்லும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் அனைவரும் சர்வதேச பள்ளிகள் வெளிநாடு பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியாவிலேயே சிறந்த கல்வி கொள்கையை கொண்ட மாநிலமாக, பள்ளி மாணவர் சேர்க்கை; உயர்கல்வியில் சேர்க்கை என அனைத்திலும் முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு கல்விக் கொள்கையை அழித்துவிட்டு மிக மோசமாக செயல்படும் கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என நீங்கள் சொல்வது எனக்கு வேடிக்கையாக உள்ளது.
எப்படி நீங்கள் 20 ஆயிரம் புத்தகம் படித்த பின்பும் இப்படியான யோசனை சொல்ல முடிகிறது என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அதேபோல CUET தேர்வின் உண்மையான நோக்கம் என்ன? மத்திய பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையாக ரிசர்வேஷன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினார்கள், ஆனால், தற்போது ஸ்டேட் போர்டு மாணவர்களை புறம் தள்ளும் விதமாக தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வினால் பயன் அடைபவர்கள் பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள் மட்டுமே. அது ஒருநாளும் அரசாங்க பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.
இப்போது மீண்டும் கேட்கிறேன் என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். தமிழக மாணவர்கள் ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்ட தவறான கல்வி கொள்கை முறையில் ஏன் ஏற்க வேண்டும்? ஏன் தமிழக பாஜகவினர் தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் படும் கஷ்டங்கள் பற்றி பேச மறுக்கின்றனர்?
அதேபோல பாஜக அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் தேர்வு கொள்கைகள் ஏன் இந்தி பேசும் மாநிலத்திற்கு ஏதுவாக அமைகிறது மற்றும் வசதி படைத்த, சமூகத்தில் முன்னேறிய குடும்பத்தைச் சார்ந்த நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும் படியான கொள்கைகளை கொண்டு வருகிறது?
உண்மையிலேயே உங்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் தமிழர் விரோத தேர்வுகளால் நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாடு மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புங்கள். உறுதியாக சொல்கிறேன் தமிழ்நாடு தனது முன்னேற்றமான கல்வி முறையை என்றும் பாதுகாக்க தொடர்ந்து போராடும். உங்களுக்கும் சேர்த்து தான் இந்த தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனக் காட்டமாகப் பதிலடி கொடுத்திருக்கிறார் சசிகாந்த்.
இதையும் படிங்க: இவுங்களுக்கு மனசுல ஜெயலலிதான்னு நினைப்பு.. அதிமுகவை டேமேஜ் ஆக்கிய டிடிவி தினகரன்..!