சொத்துக்காக தாயை அடித்து கொடுமை படுத்தும் மகள்.. என்னை விட்டுவிடு என கதறி துடிக்கும் தாய்..
ஹரியானா மாநிலத்தில் பெற்ற தாயை, அவரது மகளே சொத்து கேட்டு அடித்து கொடுமை செய்யும் வீடியோ வைரலான நிலையில் அப்பெண் மீது அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
முதியவர்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி நம்மை கலங்கடிக்கும். அதில் பெரும்பாலான காட்சிகளில், மருமகள்கள், மாமியாரையோ, மாமனாரையோ அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெறும். வேறு வீட்டு பெண் என்பதால் தனது மாமியார், மாமனாரிடம் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என அதற்கு சமாதானம் சொல்வர். ஆனால் சமீபகாலமாகவே தனது சொந்த தாய் - தந்தையரை அவர்களது குழந்தைகளை சொத்து கேட்டு அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கோவையில் பிரபல தொழிலதிபரின் மகன் அவரை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹரியானாவில் பெண் ஒருவர் தனது தாயை இரக்கமின்றி தாக்கி, ஏளனமாக நடத்தும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலம், ஹிசாரின் ஆசாத் நகரில் உள்ள மாடர்ன் சாகேத் காலனியைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி. தனது கணவர் மறைவிற்கு பிறகு மகள் ரீட்டா, மகன் அமர்தீப் சிங் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சஞ்சய் புனியா என்பவருக்கும் ரீட்டாவுக்கும் திருமணம் நடந்தது. பெரும் செலவில் அவர்கள் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது குருஷேத்திரத்தில் உள்ள அவர்களது நிலத்தை விற்று 65 லட்ச ரூபாயை ரீட்டா பெற்றுகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'வாழ்நாளில் பாஜக எங்களை தோற்கடிக்கவே முடியாது...' மோடிக்கு சவால்விட்ட கெஜ்ரிவால்..!
இந்நிலையில் சிறுதுநாளிலேயே மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்த ரீட்டா, மற்றொரு குடும்ப சொத்தையும் தன் பெயரில் எழுதி தரச்சொல்லி சண்டை போட்டுள்ளார். இதுகுறித்து அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இனி இவ்வாறு சண்டையிடுவாய் என்றால் இங்கு வராதே என அவரது சகோதரர் அமர்தீப் சிங் தடுத்துள்ளார். ஆனால் என்னை நீ தடுக்க முடியாது. என்னை தடுத்தால் உன்மீது பொய் வழக்கு தொடர்வேன் என ரீட்டா அவரை மிரட்டி உள்ளார். அதுமட்டுமல்லுமால் தனது தாயை தன்னுடனே கூட்டிகொண்டு சென்று, தனது வீட்டில் சிறை வைத்துள்ளார். ஆரம்பத்தில் பெற்ற தாயை திட்டுவதோடு நிறுத்திய ரீட்டா அதன்பின் அவரை அடிக்க துவங்கினார்.
இதுகுறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்று நிமிட வீடியோவில், அவர் தனது தாயை திட்டுவதையும், தொடையில் கடிப்பதையும், அறைவதையும் பார்க்க முடிகிறது. இடையில், என்னை பெயரில் சொத்தை மாற்றிக்கொடு என்றும் இன்னும் நீ எத்தனை காலம் தான் வாழ்வாய் பார்க்கிறேன் என்றும் ஏளனமாக பேசுவதும் பதிவாகி உள்ளது. அவரது தாக்குதலை தாங்க முடியாமல், தன்னை விட்டுவிடும்படி அவரது தாய் நிர்மலா தேவி கண்ணீர் மல்க கெஞ்சுவதும் அதில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை கண்டதும் பதறிப்போன அமர்தீப் சிங் இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த ஆசாத் நகர் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி இன்ஸ்பெக்டர் சாதுராம், அமர்தீப் சிங் என்பவரிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தது, அவரது சகோதரி ரீட்டா, தங்களது தாயை சிறைபிடித்து, அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். வாய்மொழியாக அவதூறாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது தாயின் உயிருக்கு தனது சகோதரி ரீட்டாஅச்சுறுத்தல் விடுக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரீட்டா மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் மற்றும் நலன்புரி சட்டத்தின் பிரிவு 24 மற்றும் பிரிவு 115, 127(2), 296, 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடு புகுந்து சோதனை: போலீஸ் மிதித்ததில் கைக்குழந்தை நசுங்கி பலி..