×
 

இபிஎஸ்-க்கு எதிராக தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு.. இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக  அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு பெருகும் ஆதரவு.. கிரீன் சிக்னல் கொடுத்த நவீன் பட்நாயக்!

அந்த மனுவில், ஏற்கனவே செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது என்பதால், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இ பி எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையிலும், அரசு இணைய தளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பேசியதாகவும் அவதூறு கருத்து எதுவும் கூறவில்லை என்றார். 

தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தயாநிதி மாறன் குறித்த செய்திக்கு சம்பந்தப்பட்ட நாளிதழ் வருத்தம் தெரிவித்த நிலையிலும் அவதூறு கருத்து பேசியதாக கூறினார்.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி மனு குறித்து தயாநிதி மாறன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஏப்ரல் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால விதித்து உத்தரவிட்டார்.
 

இதையும் படிங்க: தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளத் தயார்.. விடுவிக்கக்கோரிய மனுவை திரும்ப பெற்ற இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share