100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!
டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் டேட்டிங் செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப, மாறி வரும் காலச் சக்கரத்தில் மோசடிகளும் விதம் விதமாக வலம் வந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.
முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து நகை பணங்களை சுருட்டிக் கொண்டு வேறு இடங்களுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றி, மீண்டும் அதே மோசடியை மற்றொரு பெண்ணிடம் அரங்கேற்ற தொடங்குவார்கள்.
இப்படி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர்களை "கல்யாண மன்னன்" என்று செய்தி போடுவதை பத்திரிகைகளில் நாம் பார்த்து இருக்கிறோம். இப்போது "உள்ளங்கையில் உலகம்" என்கிற அளவிற்கு, தகவல் தொழில்நுட்பத் துறை கொடி கட்டி பறக்கிறது. எல்லாவற்றுக்குமே தனி செயலிகள், சமூக வலைத்தளங்கள். அதே போல் பல்வேறு திருமண செயலிகளை தொடங்கி, திருமணத்துக்கு வரன் தேடும் பெண்களை குறி வைத்து சில இளைஞர்கள் தற்போது வலை வீசுகிறார்கள்.
இதையும் படிங்க: டெல்லியில் கலவரத்தை உருவாக்க இஸ்லாமிய போலீஸ்காரர் சதி..! பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..!
"டேட்டிங்" என்ற பெயரில், அவர்களுடன் அறிமுகமாகி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு பின்னர் தங்கள் இடத்தை மாற்றிக் கொண்டு புதிய ஐடியில் மீண்டும் மோசடியை தொடர்கிறார்கள்.
அப்படி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்த ஒருவர் டெல்லியில் சிக்கினார். கிழக்கு டெல்லி நியூ உஸ்மான்பைரில் உள்ள அவருடைய வீட்டில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர் மனோஜ் கஹ்லியன். (வயது 35).
தன்னை மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் அதிகாரியாக அந்த செயலியில் தன்னை அவர் விளம்பரம் செய்து கொண்டார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அந்த காதல் மன்னன் மனோஜ் பற்றி அதிர்ச்சி அளிக்கும் பகீர் தகவல்கள் தெரிய வந்தன.
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தப் பெண்ணை போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் தனது திருமண செயலி மூலம் டேட்டிங் செய்து 3 கோடி முதல் நான்கு கோடி ரூபாய் வரை அவர் பணம் பறித்து இருப்பது தெரிய வந்தது.
இதே போல் மற்றொரு பெண், திருமண செயலி மூலம் மனோஜை சந்தித்ததாகவும் அப்போது ஏற்பட்ட அறிமுகத்தால் தன்னுடைய வீட்டிற்கு வந்து கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்களை பெற்றதாகவும் போலீசாருக்கு புகார் கொடுத்திருந்தார்.
வங்கி அட்டைகளில் இருந்த பணத்துடன் ஒரு மொபைல் போல் ரூ.50,000 ரொக்க பணம் ஆகியவற்றையும் மனோஜ் திருடிச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இதே பாணியில் தான் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றி இருப்பதாக டெல்லி மேற்கு துணை போலீஸ் கமிஷனர் விசித்ரா வீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"டெல்லி மெட்ரோ ரயில் அதிகாரி என்று தன்னை செயலியில் கூறிக் கொண்ட மனோஜ், உண்மையில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவன (டி எம் ஆர் சி) கட்டிடத்தில் சாதாரண காவலராக (செக்யூரிட்டி) பணிபுரிந்து வந்தார். கடந்த 2017 முதல் திருமண வலைத்தளத்தில் கணக்குகளை உருவாக்கி இப்படி மோசடிகளை தொடர்ந்து இருக்கிறார்.
ஒரு காதலியை ஏமாற்றி பணம் பறித்த பின் பழைய ஐடியை அழித்துவிட்டு புதிய ஐடிகளை உருவாக்குவார். இப்படி கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் 50க்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கி இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். விலை உயர்ந்த கைபேசி அல்லது ஆடம்பர பொருட்களுக்கு பணம் செலுத்துமாறு தனது வலையில் சிக்கிய பெண்களிடம் அவர் ஆசை வார்த்தை கூறி, பின்னர் இறுதியில் அவர்களுடைய வீட்டிற்கே சென்று வீட்டில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் அள்ளிச் சென்று விடுவார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காதல் மன்னன் மனோஜ் மீது நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்திருக்கும் 150 பக்க குற்ற பத்திரிகையில் இந்த மோசடி குறித்து முழுமையாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இதையும் படிங்க: NDA கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே தமிழர் ஜி.கே.வாசன்..! பீகார் வங்காளத்தை தட்டித் தூக்க கூட்டத்தில் முடிவு..!