2021-ல் திட்டமிடாமல் கோட்டைவிட்டாரா?... டிடிவியை இணைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தகுதியில்லாத தலைவரா எடப்பாடி பழனிசாமி? ...
குருமூர்த்தி பேசியதை எடப்பாடி கேட்காமல் விட்டு விட்டாரா? எடப்படி பழனிசாமி டிடிவியை இணைக்காமல் கோட்டை விட்டாரா? தகுதியில்லாத தலைவர் அவர் என்று குருமூர்த்தி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா? சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை .
அதிமுக பாஜக உறவே வேண்டாம் என்று முடிவெடுத்த ஜெயலலிதா, அந்த முடிவு சரியானதுதான் என்பதை தனது தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்தார். ஜெயலலிதா இருக்கும் வரை பாஜகவால் அதிமுகவை நெருங்கக்கூட முடியவில்லை. மோடியிடம் நட்பு பாராட்டினாலும், பாஜகவை தள்ளியே வைத்திருந்தார் ஜெயலலிதா. மோடி இல்ல இந்த லேடி என அடித்து பேசி 37 தொகுதிகளை தனித்து வென்றார் ஜெயலலிதா.
2016 சட்டமன்ற தேர்தலிலும் தனது சாதுர்யமான காய் நகர்த்துதல் மூலம் மீண்டும் ஆட்சியை பிடித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் பாஜக தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. சசிகலா சிறைக்கு போக ஓபிஎஸ் மூலம் அதிமுகவுக்குள் தனது வேலையை ஆரம்பித்த பாஜக டிடிவி சசிகலாவை அதிமுகவிலிருந்து வெளியேற்ற வைத்தது. கைகோர்த்து ஓபிஎஸ்-இபிஎஸ் ஒன்று சேர்க்கப்பட்டனர்.
அதன் பின்னர் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்தது அதிமுக. இதனால் தமிழகத்தில் கடும் வெறுப்புக்குள்ளானது அதிமுக. இதை திமுக சரியாக பயன்படுத்திக்கொண்டது. இன்றுவரை பயன்படுத்தி வருகிறது. தான் பாஜக வலையில் வீழ்த்தப்பட்ட அதிமுகவை தன் இஷ்டத்துக்கு வளைக்கிறது பாஜக. அதிமுகவிலிருந்து வெளியேற்ற டிடிவியை நிர்பந்தித்தவர்கள், பின்னர் 2021 ஆம் ஆண்டு பொது தேர்தலில் டிடிவியின் ஆதரவு இருந்தால் கூடுதலாக 20 தொகுதிகள் வரை வெல்ல முடியும் என்பதை உணர்ந்து தலைகீழ் நிலைப்பாடு எடுத்து கூட்டணிக்குள் டிடிவியை கொண்டுவர அதிமுக தலைமையிடம் பேசியது.
இதையும் படிங்க: இருந்தாலும் மறைந்தாலும்.... பகைவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்த எம்ஜிஆர்..
இந்த விவகாரத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இப்போது எடப்பாடிதான் காரணம் என்று விமர்சனம் குருமூர்த்தி போன்றோரால் வைக்கப்படுகிறது. முதல் காரணம் உளவுத்துறை ரிப்போர்ட்டை வைத்து அதிமுகவே வெல்லும் என எடப்பாடி பழனிசாமி நம்பினார் என்று கூறுகின்றனர். அடுத்து டிடிவியை சேர்க்காமல் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்திவிட்டார் என்கின்றார்.
டிடிவியை வெளியேற்றிய பாஜகவே மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்தால் தன் இடம் பாதிக்கப்படும், பாஜக சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது என முடிவெடுத்தது எடப்பாடி பக்கம் இருந்து பார்க்கும்போது நியாயமாகத்தான் தெரிகிறது. கட்சியே உடையும் சூழ்நிலையை ஓபிஎஸ் மூலம் உருவாக்கிய பாஜக எடப்பாடியின் எண்ணம் சரிதான் என பின்னர் நிருபித்தது.
டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வந்திருந்தால் கூடுதலாக 20 தொகுதிகள் அதிமுக பெற்றிருக்கும் உண்மைதான், ஆனால் டிடிவி மீண்டும் அதிமுகவுடன் ஏதோ ஒரு வகையில் இணைவது தனது தலைமைக்கு சிக்கல் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு தவிர்த்ததால் கட்சி காப்பாற்றப்பட்டது, பாஜக தான் தீர்மானிப்பதை அதிமுக தலைமை மீது திணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர்கள் விரட்டு என்றால் டிடிவியை விரட்டவும், சேர்த்துக்கொள் என்றால் சேர்த்துக்கொள்ளவும் ஒரு கட்சி என்றால் அதற்கு தலைமை எதற்கு என்று அதிமுகவினரின் கேள்வியாக உள்ளது.
டிடிவி தினகரன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக பேசி வருகிறார். பாஜக அதிமுக இணைய வேண்டும் என்று பேசி வருகிறார். இப்படிப்பட்டவரைத்தான் ஒருவேளை பாஜக கூட்டணி அமைந்தால் கூட்டணிக்குள் கொண்டுவரவேண்டும் என்று குருமூர்த்தி சொல்கிறார், இது அதிமுகவுக்கும் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கும் விரோதமானது என்கின்றனர் அதிமுகவினர். அதிமுக பாஜக கூட்டணி வரவேண்டும் ஆனால் எடப்பாடி இருக்க கூடாது என குருமூர்த்தி பேசுவது அதிமுகவுக்குள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தவே என்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுகவின் தலைமையான எடப்பாடி பழனிசாமி தலைமையை ஒருமித்த கருத்துடன் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எதிர்த்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தங்கள் அரசியல் வாழ்வுக்காக பாஜக பக்கம் ஒதுங்கும் இவர்களை அதிமுக தலைவர்களாக பாஜக தூக்கி கொண்டு வருவது அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும். ஒன்றுக்கும் உதவாத தனிநபர்களை தலைவர்களாக ஏற்று அதிமுக என்று சொல்லும் பாஜக மற்றும் குருமூர்த்தி போன்றோர்தான் ஒரு கட்சியின் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தலைவர் இல்லை என்கிறார்கள்.
முதலில் இந்த ஆணவப்போக்கை கைவிட வேண்டும். இவர்கள் நோக்கம் அதிமுக-பாஜக கூட்டணி அல்ல. அதிமுகவை உடைத்து ஓபிஎஸ் தலைமையில் தன் சொல்படி ஆடும் ஒரு கட்சியை வைத்து பாஜகவை உள்ளே நுழைக்க வேண்டும் என்பதே, தேர்தல் ஆணையத்தாலும், உச்ச நீதிமன்றத்தாலும் அங்கிகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தேர்வையே மறுக்கும் இவர்கள் சான்றிதழ் இருந்தால் தான் ஏற்போம் என்று சொல்வது என்ன வகை ஜனநாயகம், இத்தனை பேரும் எதிர்க்கும்போது எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுமை இருக்கிறது அல்லவா என்று ஒரு அதிமுக நிர்வாகி கேட்டதையும் நாம் மறுக்க முடியாது.