×
 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் தேமுதிக கூட்டணி அள்ளும்... பிரேமலதா விஜயகாந்த் அதிரடிக் கணிப்பு.!

தமிழகத்தில் 2026இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் பிரேமலதா விஜயகாந்த்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் வாழ்ந்தால்தான் தமிழகமே வாழ்ந்ததாக அர்த்தம். இதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். தேமுதிகவை பொறுதவரை அனைத்து மொழியையும் கற்போம், அன்னை மொழியைக் காப்போம் என்பதுதான். இதைத்தான் எங்களுக்கு விஜயகாந்த் சொல்லிக் கொடுத்துள்ளார்.

அதனால், நம் தாய் மொழி தமிழ் நம்முடைய உயிர் போன்றது. ஆனால், நாம் மற்ற மொழிகளைக் கற்கும் போதுதான், தமிழகத்தில் இருந்து வெளியில் செல்லும்போது நமக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும், வருங்காலம் சிறக்கும்.
எனவே, அவரவர் எந்த மொழியைப் படித்தாலும் தவறு இல்லை. இதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்ட உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேமுதிக உறுதியாகப் பங்கேற்கும். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை வஸ்துக்கள் அதிகரித்துள்ளது.  பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது. இதை அரசு தடுக்க வேண்டும்.

வருகிற ஏப்ரல் மாதத்தில் தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டங்கள் முடிந்த பிறகு 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிப்போம்.  கட்சி வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். தமிழகத்தில் 2026இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனக்கோட்டை கட்டி வைத்த பிரேமலதா… மனவலியை கொடுக்கும் எடப்பாடியார்… நெருக்கடியில் அதிமுக..!

இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி பதவி...கமலுக்கும், வைகோவுக்கும் கிடைக்குமா? மோதும் சிபிஎம்...தேமுதிகவுக்கு கிடைக்குமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share