ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்.... அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையிலிருந்து காப்பாற்றிய ஆளுநர்...
அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை மாநிலம் முழுவதும் ஆளுகின்ற அரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்த நேரத்தில் திமுகவை காப்பாற்றும் விதமாக சட்டசபையில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது.
திமுக ஆளுநர் எதிர்ப்பு போராட்டம் தான் தமிழகத்தில் தலையாய பிரச்சனை என்பது போலவும் அதிமுக-பாஜக கள்ள உறவு என்கிற கோஷத்தை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில் நேற்று சட்டமன்ற கூட்டம் தொடங்கிய பொழுது ஆளுநர் ரவி பங்கேற்க வந்தார். பங்கேற்க வந்த வந்தவுடன் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது, தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட சிறிது நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவருடைய கோரிக்கை செவிமடுக்கப்படாத நிலையில் தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்பதை காரணமாக காட்டி ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
ஆளுநர் வெளிநடப்பு செய்த நேரம் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். சட்டசபைக்குள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை ஒட்டி ’யார் அந்த சார்’ பேட்ஜ் அணிந்து, ஆளுநர் உரைக்கு முன் பதாகைகளை பிடித்தபடி அதிமுகவினர் கோஷமிட்டனர். இந்த விவகாரம் வெளிவராமல் இருக்க முன் கூட்டியே லைவ் லிங் யாருக்கும் கொடுக்காமல் அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஆளுநர் வெளி நடப்பு செய்யாமல் இருந்திருந்தால் இந்த விவகாரம் பெரிதாக ஆக்கப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக வெகுண்டெழுந்த திமுக... காலையிலேயே மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
ஆனால் ஆளுநர் கதாநாயகனாக இந்த விவகாரத்தில் மாறியதால் விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது. ஆளுநர் இந்த விவகாரத்தில் திமுகவுக்கு உதவினார் என்றே சொல்லலாம். அவர் வெளிநடப்பு செய்த சில நிமிடங்களில் அதிமுகவினரையும் சபாநாயகர் வெளியேற்றினார். ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வெளிநடப்பு செய்தனர். பாமக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்ததால் நேற்றைய சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிதாக எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் மொத்த எதிர்கட்சிகளும் ஓரணியில் நின்று முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். திமுகவின் தோழமைக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றன.
திமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் ’யார் அந்த சார்’ என்கிற ஹேஷ்டேக் பிரபலமடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அதிமுக தமிழகம் முழுவதும்’ யார் அந்த சார்’ போஸ்டரை பிரபலபடுத்தியது அல்லாமல் தொடர்ந்து போஸ்டர்கள், போராட்டங்கள், ஸ்டிக்கர்கள் என பிரபலப்படுத்தி வருகிறது.
அரசியல் கட்சித் தலைவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் பொழுது ’யார் அந்த சார்’ என்கிற கேள்வி வைக்கப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் பேட்டிகளில் ’யார் அந்த சார்’ என்று கேட்கும் நிலை அளவிற்கு அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரம் வெடித்து கிளம்பி வரும் நிலையில் ஆளுநர் அதன்மீது தண்ணீரை ஊற்றும் செயலை செய்து திமுகவை காப்பாற்றியுள்ளார் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
அண்ணாபல்கலைகழக விவகாரத்தில் சிக்கி தவித்த திமுக இதை அழகாக பயன்படுத்திக்கொண்டது. ஆளுநருக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை இன்று காலை முதல் நடத்தி வருகிறது. இதில் அண்ணாபல்கலைக்கழக விவகாரம் பின்னுக்கு தள்ளப்படும் என்று திமுக நம்புகிறது. அதே நேரம் அதிமுக பாஜக கூட்டு என்கிற ரீதியிலும், ஆளுநரை அதிமுக காப்பாற்றுகிறது என்கிற பிரச்சாரத்தையும் திமுக நைசாக இந்த போராட்டங்களில் திணிப்பதையும் காணமுடிகிறது.
இதன்மூலம் திமுகவின் பிரச்சாரத்திற்கும், அண்ணா பல்கலைகழக விவகாரத்தை பின்னுக்கு தள்ளி திமுக போராட்டம் ஆளுநர் எதிர்ப்புத்தான் தமிழகத்தின் பிரதான பிரச்சனை போல் மாற்ற உதவி விட்டார் ஆளுநர். பாஜக அதிமுக கள்ள உறவு கூட்டணி என்கிற கோஷமும் வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சமூகநீதியில் விளம்பர மாடல் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை ...அறிக்கையில் புயலை கிளப்பிய ராம்தாஸ்