டெல்லியில் நடைபெற்ற திமுக மாணவரணி ஆர்பாட்டம்.. UGCயின் புதிய நெறிமுறைகளுக்கு எதிராக முழக்கம்...
டெல்லியில் நடைபெற்ற திமுக மாணவரணி ஆர்பாட்டம்
துணை வேந்தா்கள் நியமனத்தில் முழுமையாக ஆளுநருக்கே அதிகாரம் வழங்கும் வகையில் கடந்த மாதம் UGC எனும் பல்கலைகழக மானியக் குழு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள் மாநில உரிமைகளை பறிப்பதாக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனித்தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் யூஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்படி பிறமாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை ஏற்று கேரள அரசு யூஜிசி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. தெலங்கானாவும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஜந்தர்மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகனும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ மற்றும் திமுக மாணவரணி அமைப்பாளர் சிவிஎம்பி எழில்அரசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஆன்மீகத்தின் முதல் எதிரி… திமுக அரசே தெளிவுபடுத்து...' திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொங்கியெழுந்த எம்.பி.,சு.வெங்கடேசன்
அப்போது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளதாக ஆர்பாட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக யூஜிசி வரைவு அறிக்கை, கல்வியை ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் வசம் இருந்து பிடுங்கி மத்திய அரசின் கையில் கொடுக்கும் ஒரு கருவி என்று எடுத்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?