இத பிடிச்சா சளி சரியாபோயிடும்.? சிறுவனுக்கு சிகரெட் கொடுத்த டாக்டர்.. வீடியோவால் வந்த சிக்கல்..!
உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுவனை, ட்ரீட்மெண்ட் என்னும் பெயரில் அரசு டாக்டர் ஒருவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தீய பழக்கங்களுள் ஒன்றாகவும், உடலுக்கு பெரும் தீங்க விளைவிக்க கூடியதாகவும் பார்க்கப்படும் ஒரு விஷயம் புகைபிடிப்பது. புகைப்பிடிப்பது கேடு தரும், புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் ஆங்காங்கே புகைப்பழக்கத்திற்கு எதிராக நிறுவப்பட்டு வருகின்றன.
சிகரெட் பாக்கெட்டிலும், சினிமா தியேட்டர்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உடல் நலனை பாதித்து, உயிரை பறித்து குடும்பங்களை நிலைகுலைய செய்யும் இந்த புகைப்பழக்கத்திற்கு எதிராக இளைய சமுதாயத்தை திரட்ட வேண்டிய இந்த சமயத்தில், அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவரே 5 வயது சிறுவன் ஒருவனுக்கு சிகரெட் குடுத்து புகைக்க வற்புறுத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் ஜலான் நகரில் 5 வயது சிறுவன் ஒருவர் சளி தொந்தரவால் அவதி பட்டுள்ளான். இதனை அடுத்து அவனது பெற்றோர், அவனை குத்தாவுண்ட் பகுதியில் உள்ள மத்திய சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அரசு மருத்துவர் சுரேஷ் சந்திரா என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். சிறுவனை அருகில் அமர வைத்த டாக்டர் சுரேஷ் சந்திரா, சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, சிகரெட் ஒன்றை கொடுத்து புகைப்பிடிக்க வற்புறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நினைவில் காதலன்.. திருமணமான 2 வாரத்தில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவி கதையை முடித்த மனைவி..!
அந்த வீடியோவில் ஐந்து வயது சிறுவனை டாக்டர் சந்திரா வாயில் சிகரெட்டை வைக்கச் சொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பின்னர், டாக்டர் சுரேஷ் சந்திரா, தன்னிடம் இருந்த லைட்டரால் சிகரெட்டை பற்ற வைக்கிறார். சிறுவனை பலமுறை சிகரெட்டை இழுக்கச் சொல்கிறார். ஆனால் ஏதும் அறியாத அந்த பிஞ்சு குழந்தை, சிகரெட் எப்பிடி பிடிப்பது என மழங்க மழங்க விழிக்கிறது. இதனை பார்த்ததும் டாக்டர் சுரேஷ் சந்திரா, அந்த சிகரெட்டை எடுத்து தனது வாயில் வைத்து புகைபிடித்து காண்பிக்கிறார். அதன் பின் மீண்டும் சிறுவனை அதே போல் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.
சிறுவனால் புகைப்பிடிக்க முடியாததால் அவனை கண்டிக்கும் டாக்டர் சுரேஷ் சந்திரா, இன்றைய பயிற்சி இவ்வளவு தான். அடுத்த முறை வாருங்கள். மீண்டும் சொல்லித் தருகிறேன் என கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலர், மருத்துவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான நரேந்திர தேவ் சர்மா கூறுகையில், குத்தாவுண்டில் உள்ள மத்திய சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்ட டாக்டர் சுரேஷ் சந்திரா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் இதுகுறித்த விரிவான அறிக்கை மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க நாங்கள் கடுமையான வழிமுறைகளை பிறப்பித்துள்ளோம் என்றும் டாக்டர் நரேந்திர தேவ் சர்மா கூறினார். மேலும் இதுகுறித்து நரேந்திர தேவ் சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் குத்தாவுண்ட் காவல் நிலையத்தில் டாக்டர் சுரேஷ் சந்திரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் செயல் புரிந்ததாக அவர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு உள்ளது.
இருப்பினும் டாக்டர் சுரேஷ் சந்திரா தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அது சிகரெட் அல்ல. சிகரெட் சாக்லெட் என்றும் கூறி உள்ளார். மேலும் அந்த வீடியோ ஊழியர்களால் எடுக்கப்பட்டது என்றும், அந்த வீடியோ ஒரு வருடத்திற்கு பழையது என்றும் விளக்கம் அளித்துள்ளார். குத்தாவுண்ட் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்களும் வசிக்கிறார்கள் என்றும், அந்த சிறுவன் செவிலியர் ஒருவரின் மகன் என்றும் டாக்டர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அவர்கள் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அந்த அளவிற்கு நட்பில் இருந்துள்ளோம் என்றும் கூறி உள்ளார். இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்.. பாராட்டி தள்ளிய உ.பி. மாஜி முதல்வர் அகிலேஷ்!!