ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்... அதிர்ச்சியில் உறைந்த கும்பகோணம்...!
கல்லூரி மாணவி விடுதி அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த சத்தியவாணி என்ற மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் அருகே சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர் விஜயகுமார் என்பவரின் மகள் சத்தியவாணி வயது 19 கும்பகோணத்தில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார் . இவர் இதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி சத்தியவாணியின் தாய் பானுமதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இது சத்தியவாணியை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சக அறை தோழிகளுடன் தேர்வு எழுத சென்ற சத்தியவாணி, ஹால் டிக்கெட்டை ரூமில் வைத்து விட்டு வந்து விட்டேன் போய் எடுத்து வருகிறேன் என்று சென்றவர் தேர்வு அறைக்கு திரும்பவில்லை.
இதையும் படிங்க: வக்பு சட்டம் எதிர்ப்பு.. திமுக அரசிடம் கற்றுக்கோங்க.. காஷ்மீர் அரசுக்கு முப்தி மெகபூபா கொட்டு!
தேர்வு நிறைவு பெற்றதும் சத்தியவாணியின் தோழிகள் அறைக்குச் சென்று பார்த்த போது சத்தியவாணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக இந்த தகவல் கல்லூரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் .
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சத்தியவாணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த கல்லூரி மாணவி சத்தியவாணியின் உறவினர்கள் தொலைபேசி எண்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்ததாகவும் அதனால் சத்தியவாணி வீட்டு அருகில் இருந்த மற்றொரு மாணவியின் வீட்டிற்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்ததாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு கல்லூரிக்கு வந்த சத்தியவானின் உறவினர்கள் ஏன் தங்களுக்கு உரிய தகவல் தரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்ற வருகிறது அமைதி காக்கும் படி சத்தியவானின் உறவினர்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்.
மூன்றாண்டுகளுக்கு முன் சத்தியவாணியின் இளைய சகோதரி கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அதன் தொடர்ச்சியாக இவரது தாய் மனஉளைச்சலுக்கு ஆளாகி சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சகோதரி மற்றும் தாயின் மரணத்தால் மன உளைச்சலில் இருந்த சத்தியவாணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சகோதரி மரணம் அதனைத் தொடர்ந்து தாயின் தற்கொலை ,குடும்ப பிரச்சனை காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சத்தியவாணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
இதையும் படிங்க: நீலிக்கண்ணீர் வடிக்காதீங்க... ரூ.100 மானியம் எங்க? - திமுகவை பொளந்தெடுத்த அண்ணாமலை!