தேர்தல் பத்திர நிதியை பறிமுதல் செய்ய முடியாது..! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் திரட்டிய நிதியை பறிமுதல் செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பொதுவாக தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் நன்கொடை பெறப்படும். இதற்கு மாற்றாக கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அதன்படி பெயர் தெரிவிக்காமல் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும்.
இந்த தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாது தேர்தல் பத்திர விற்பனை செய்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் யார் ? எனவும், எவ்வளவு பணம் கிடைத்தது? என்ற விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் தேர்தல் பத்திரம் வாயிலாக பெறப்பட்ட நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்! சூடுபிடிக்கும் அரசியல் களம்...
அதன்படி பாஜக, காங்கிரஸ் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மொத்தமாக 16,518 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் வாயிலாக திரட்டியது தெரிய வந்தது. இதன் நீட்சியாக தேர்தல் பத்திரம் வாயிலாக திரட்டப்பட்ட பணத்தை அரசியல் கட்சிகளிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அனைத்து மனுக்களையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதியை பறிமுதல் செய்ய முடியாது என்றும் இது தொடர்பான மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதே விவகாரம் தொடர்பாக மனுக்கள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அந்த மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை...