ஜிடிபி வளர்ச்சி 6.3 முதல் 6.8% வரை இருக்கும்: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
2025-26 நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று 2025-26ம் நிதியாண்டுக்கான நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2025-26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஏ.நாகேஸ்வரன் மற்றும் அவரின் குழுவினர் தயாரித்த 2025-26ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.
2025-26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது “வலுவான வெளிப்புற சக்தி, திருத்தப்பட்ட நிதி கட்டமைப்பு, நிலையான தனியார் நுகர்வு ஆகியவற்றுடன் உள்நாட்டு பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகள் தொடர்ந்து வலிமையாக, செழிப்பாக இருக்கின்றன. ஆதலால் 2025-26ம் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.3 சதவீதத்தில் இருந்து 6.8சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறோம். உலகளவில் தேவையில் ஏற்பட்ட மந்தநிலை, உள்நாட்டு சீசனில் மந்தநிலை ஆகியவற்றால் உற்பத்தித்துறை அழுத்தங்களைச் சந்திக்கிறது. தனியார் நுகர்வு தொடர்ந்து நிலையாக இருக்கிறது என்பது உள்நாட்டு தேவையில் எதிரொலிக்கிறது.
சேவைகள் வர்த்தகத்தில் உபரி மற்றும் ஆரோக்கியமான பண உள்ளீடு, நிதி ஒழுக்கம் மற்றும் வலுவான வெளிப்புற சமநிலை ஆகியவை பேரியியல்பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களித்தன. வலுவான அடித்தளம் அமைக்கவும், நிலையான வளர்ச்சியைப் பெறவும், வெளிப்புற நிலைத்தன்மையற்ற சூழலுக்கும் இந்த காரணிகள் உதவும்.உணவுப் பணவீக்கம் அதாவது உணவுப் பொருட்கள் விலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அதிகரித்துவருவது பெரிய கவலைக்குரியதாக இருக்கிறது. இது 2025 கடைசி காலாண்டில்(2025 ஜனவரி முதல் மார்ச்) பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரீப் அறுவடை தொடங்கி காய்கறிகள், பழங்கள் வரத்து அதிகமானவுடன் விலை குறைய் தொடங்கும். 2025-26ம் ஆண்டின் முதல் பாதியில் ராபி பருவத்தில் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உணவுப் பொருட்கள் விலை கட்டுக்குள் வந்து, பொருட்கள் விலை குறையும். அப்போது நுகர்வோர்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும்.
இதையும் படிங்க: இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு...
நாட்டில் முதலீட்டு செயல்பாடுகள் வேகம் குறைந்துள்ளதையும் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், இந்த வேகக்குறைவு தற்காலிகமானதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன குறிப்பாக கொள்கைரீதியான ஆதரவு , வர்த்த உறவுகளை வளர்த்தல், மேம்படுத்துதல் ஆகியவை முதலீட்டை அதிகப்படுத்தும். 2025-26ம் ஆண்டில் உள்நாட்டு முதலீடு, உற்பத்தி வெளியீடு, பணவீக்கம் குறைதல் ஆகியவற்றை நேர்மறையாக எதிர்பார்க்கலாம். நாட்டின் பொருளாதார அடிப்படை கட்டமைப்புகள் தொடர்ந்து வலுவாக இருக்கிறது. நிலையான நிதி முறை, கட்டமைப்பை மேம்படுத்துதல், அரசின் கொள்கைகள் ஆகியவை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25: முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? முழு விபரம் உள்ளே!