×
 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; விமான நிறுவனங்களுக்குப் பறந்த அதிரடி உத்தரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஜம்மு - காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க விமான நிறுவனங்களுக்குசிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தை அடுத்து ஜம்மு- காஷ்மீர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.  

இதனால் ஜம்மு - காஷ்மீர் முழுவதுமே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வேக, வேகமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பாகவும், உடனடியாகவும் வெளியேற சுற்றுலா பயணிகள் விமானப் போக்குவரத்தை தேர்வு செய்து வருவதால் விமானங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிக்கலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றுவதற்கு வசதியாக ஸ்ரீநகருக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீநகரில் கால் வைத்த அமித் ஷா... ஜம்மு - காஷ்மீர் முதல்வருடன் தீவிர ஆலோசனை... அடுத்து நடக்கப்போவது என்ன? 

ஸ்ரீநகர் விமானக் கட்டணங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல்  ரத்துசெய்தல் மற்றும் மறு அட்டவணை கட்டணங்களைத் தள்ளுபடி செய்வது குறித்தும் விமான நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு அனைத்து விமான நிறுவனங்களுடனும் அவசரக் ஆலோசனைக் கூட்டத்தினர் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஸ்ரீநகர் வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு எக்காரணம் கொண்டும் கூடுதல் கட்டணங்களை விதிக்கக்கூடாது என்றும், இந்த முக்கியமான நேரத்தில் எந்த பயணிகளும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ  ஸ்ரீநகரிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு மொத்தம் நான்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் இரு விமான நிறுவனங்களும் டிக்கெட் மறுசீரமைப்பு மற்றும் ரத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளன.

மேலும் சுற்றுலா பயணிகள் உடனடியாக ஜம்மு - காஷ்மீரில் இருந்து வெளியேறும் வகையில் ஸ்ரீநகரிலிருந்து நான்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.இரண்டு டெல்லிக்கும் இரண்டு மும்பைக்கும்  இயக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  
 

இதையும் படிங்க: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா முதல் இலங்கை வரை... உலக நாடுகள் கடும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share