×
 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக செயல்பாடுகள் என்ன? தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக செயல்பாடுகள் என்ன? தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை, கண்காணித்து, சீர்திருத்தத்துக்கு பரிந்துரைகளை வழங்கும்படி, தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள  எஸ்.ஏ. கல்வியியல் கல்லூரி, பல்கலைக்கழக இணைப்பு வழங்கக் கோரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருந்தது.

அதன்படி, கல்லூரியை ஆய்வு செய்த பல்கலைக்கழக குழு, பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், கல்லூரிக்கு இணைப்பு வழங்க மறுத்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்...

இதை எதிர்த்து கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, பல்கலைக்கழக உத்தரவில் தலையிட முடியாது என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், ஆய்வுக்குழு குறிப்பிட்டிருந்த குறைகளைச் சுட்டிக்காட்டி, அதுகுறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க பல்கலைக்கழகம் அறிவுறுத்தியதை அடுத்து, அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், அவை பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த ஆவணங்களை பரிசீலிக்காதது ஏன் என்பது குறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, பல்கலைக்கழகம் தரப்பில், குறைகளை நிவர்த்தி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அளித்த விளக்கத்தை பரிசீலிக்காமல், இணைப்பு வழங்க மறுத்துள்ளதாகக் கூறி, பல்கலைக்கழகத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், கல்லூரி நிர்வாகம் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், இணைப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்து 15 நாட்களில் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் சமீபகாலமாக முறைகேடுகள் நடப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை கண்காணித்து, அதனை சீர்திருத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும்படி, தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்கள் செல்போன் பறிமுதல்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share