மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 1 கோடிப்பேருக்கு இந்த மாத சம்பள உயர்வு
அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அதிகரித்த அகவிலைப்படி, 3 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி-அகவிலை நிவாரணத்தை 2 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஜனவரி 1, 2025 முதல் எனக் கணக்கிட்டு அமலுக்கு வரும். இந்த முடிவு பிரதமர் தலைமையில் மார்ச் 28, 2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த முடிவால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 நிலுவைத் தொகையும் அவர்களுக்குக் கிடைக்கும். அதாவது சம்பளத்துடன் 3 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். இது ஊழியரின் மாத வருமானத்தையும் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால், உங்கள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.360 அதிகரிக்கும். இதனால் மொத்தம் ரூ.1080 நிலுவைத் தொகை கிடைக்கும். அடிப்படை ஓய்வூதியமான ரூ.9,000 ஒவ்வொரு மாதமும் ரூ.180 அதிகரிக்கும். இதனால், மொத்தம் ரூ.540 நிலுவைத் தொகை கிடைக்கும். அரசாங்கத்தின் இந்த முடிவால் சுமார் 48.6 லட்சம் மத்திய ஊழியர்களும் 66.5 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,614.04 கோடி நிதிச் சுமை ஏற்படும்.
இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான வக்பு சட்ட திருத்த மசோதா... விளக்கமளிக்கிறது மத்திய அரசு!!
அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை-டிசம்பர் 2025 க்கு பொருந்தும். அக்டோபர் அல்லது நவம்பர் 2025-ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். இதன் காரணமாக சம்பள அமைப்பு மாறும், மேலும் அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும்.
இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் 8வது சம்பளக் குழுவின் மீது உள்ளது. ஏனெனில் விரைவில் அரசு ஊதியக் குழுவின் உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவிக்க முடியும். இந்தக் குழு 15 முதல் 18 மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்தும் அரசு முடிவு செய்யும்.
இதையும் படிங்க: ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு.. நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு..!