இளையராஜா இந்தியாவுக்கே பெருமை... புகழாரம் சூட்டும் பாமக தலைவர் அன்புமணி..!
இளையராஜா இந்தியாவுக்கே பெருமை என்று புகழாரம் சூட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
சிம்பொனி மட்டுமல்ல இளையாராஜாவும் இந்தியாவுக்கு பெருமை தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டி உள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...
வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். நாளை மறு நாள் லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், சிறப்பாக அமையவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு இசை ஞானியைவிட மெய் ஞானியே பொருத்தம்.. நேரில் சந்தித்து வியந்த திருமாவளவன்.!
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா. ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் படைத்து, அவற்றை நமது மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் மருந்தாகக் கொடுத்தவர் அவர். இசையின் உச்சத்தை என்றோ அவர் தொட்டுவிட்டதாக நாமெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த இசை மருத்துவர் தமது இசை வாழ்வின் புதிய உச்சங்களைத் தேடித் தேடிச் சென்று சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.
அடிப்படையில் இளையராஜா இசையமைப்பாளர் அல்ல. அவர் இசையை இயற்றுபவர். இசையில் ஆய்வுகளையும், புதிய புதிய தேடல்களையும் நிகழ்த்துபவர்களின் இலக்கு சிம்பொனி இசைக்கோர்வையை படைப்பது தான். சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.
எனினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் வேலியண்ட் படைத்திருக்கிறார். இதன் மூலம் ஜோசப் ஹேடன், வூல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், ஃபீலிக்ஸ் மெண்டல்சன் உள்ளிட்டோரின் வரிசையில் அவரும் இடம் பெறுவார். இது அவருக்கு மட்டுமல்ல.... ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.
இலண்டன் செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா அவர்கள்,’’சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று பெருமிதத்துடன் கூறினார். உண்மையில் சிம்பொனி இசை மட்டுமல்ல... இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை தான். அதை வேலியண்ட் நிரூபிக்கும். வாழ்த்துகள் ராஜா!
இவ்வாறு அந்த பதிவில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே தமிழ் திரையுலகிற்கும், பாமகவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. ஆனால் அன்புமணியின் மகள் சங்கமித்ரா, அலங்கு என்ற படத்தை தயாரித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அவரது வருகைக்குக் பிறகு தமிழ் சினிமாவை பாமக விமர்சிப்பது குறைந்துள்ளது. குறிப்பாக பாமக, சூப்பர் ஸ்டார் ரஜினியை அதிகமாக விமர்சித்து வந்தது. ஆனால் அலங்கு படம் தயாரித்தவுடன், அன்புமணியின் மகள் சங்கமித்ரா, முதலில் ரஜினியை சந்தித்து தான் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இளையராஜா செய்த தரமான சம்பவம்... வீடு தேடி வந்த ஸ்டாலின்!!