வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் அப்டேட்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மதிய நேரங்களில் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகியை கடந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 -4 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
இதையும் படிங்க: செஞ்சுரி அடித்த சென்னை வெயில்... மழை பெய்ய வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் சொல்வது என்ன?
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-39 டிகிரி செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-36 டிகிரி செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 34-36 டிகிரி செல்சியஸ், மலைப் பகுதிகளில் 23-31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த 7 தினங்களை பொறுத்த அளவில், மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்.2 முதல் ஏப்.04 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.05 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப். 06 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்... குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!!