இனி தண்ணீ தர மாட்டோம்..! சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம்..!
பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா காட்டமாக விமர்சித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலத்த கண்டனத்தை தெரிவித்து உள்ளன. இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்துள்ளன.
பயங்கரவாதிகளின் தாக்குதலால் பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினர். கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்பது உட்பட 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதையும் படிங்க: போர் பதற்றம்.. பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர்? இனி என்ன நடக்கும்?
பாகிஸ்தானில் உள்ள 16 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் சிந்து நதி படுகையை நம்பியே இருக்கும் நிலையில், அங்கு விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா உடனடியாக நிறுத்தினால், பாகிஸ்தானில் அதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தானில் கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் அறிவிப்பை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த ஒப்பந்தம் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். மேலும், ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைப்பதற்கான எந்த ஏற்பாடும் இதில் இல்லை. சிந்து நதிநீர் பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தானின் 24 கோடி மக்களுக்கு அது உயிர்நாடி. சிந்து நதிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த எத்தகைய விலையையும் பாகிஸ்தான் கொடுக்கும்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரின் ஓட்டத்தைத் தடுப்பது அல்லது திசைதிருப்புவது, ஆற்றின் கீழ் பகுதியின் உரிமைகளை அபகரிப்பதாகும். இது ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும். சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பதிலளிக்கும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்திய அரசு தான் எடுத்த முடிவில் விடாப்பிடியாக உள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் சிந்து நதி நீரை நம்பியே உள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கை போர் அறிவிப்பிற்கு சமம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை விட்ராதீங்க.. இஸ்ரேல் போல இந்தியா இறங்கி அடிக்கணும்.. அமெரிக்க மாஜி அதிகாரி ஆவேசம்..!