23 வயது பெண் மீது 19 வயது பையனுக்கு வந்த காதல்... 'இன்ஸ்டா' பழக்கத்தால் கடைசியில் நேர்ந்த துயரம்
திருப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண் காதலிக்க மறுத்ததால், அப்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் சினேகா (23). கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட இவர், தனது தாயாருடன் திருப்பூர் சத்யா காலனியில் வசித்து வருகிறார். சினேகாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபக் (19) என்கிற இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் கோவையில் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தீபக்கும் சினேகாவும் நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சினேகாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று தீபக் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். சந்திப்புக்கு ஒத்துக்கொண்ட சினேகாவைப் பார்க்க நேற்று மதியம் (ஜன. 27) தீபக் திருப்பூருக்கு வந்துள்ளார்.
சினேகாவின் தாய் வேலைக்கு சென்றிருந்ததால், சினேகா வீட்டில் தனியாக இருந்தார். எனவே, வீட்டிலேயே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தீபக்கைவிட சினேகா 4 வயது மூத்தவர் என்பதால், அதைக் காரணம் காட்டி சினேகா, தீபக்கின் நட்பை துண்டிக்க நினைத்திருக்கிறார்.
ஆனால், தீபக் இதை ஏற்கவில்லை. தன்னை காதலித்தாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், சினேகா அதை ஏற்க மறுத்துள்ளர். இதனால், ஆத்திரமடைந்த தீபக், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சினேகாவின் உடலின் பல்வேறு இடங்களில் குத்தி உள்ளார். உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அலறியடித்தபடி சினேகா அருகில் இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளார். வீட்டுக்குள் இருந்த தீபக்கை காவல் துறையிடம் பிடித்துத்தர அங்கிருந்தவர்கள் முயற்சித்தனர். இதுதொடர்பாக காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் காவல் துறையினர் அங்கு வந்தனர்.
இதையும் படிங்க: அப்பார்மெண்டில் இறந்து கிடந்த இன்ஸ்டா பிரபலம்.. கண் கலங்க வைத்த கடைசி பதிவு
காவலர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தீபக் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீபக்கின் சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சினேகாவும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிரை குடித்த "பிராங்க்" ...சகமாணவர்களால் கதறி அழுத ஆடியோ ..பிறந்த நாளில் கல்லூரி மாணவர் தற்கொலை ..!