அதிமுகவில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுன்?...வேங்கை வயல் பிரச்சனையை தொட்டதால் பாயும் பொய் பிரச்சாரம்?
வேங்கை வயல் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுன் கடுமையாக அறிக்கை விட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பேன் என அறிவித்ததால் ஆதவ் அர்ஜுன் அதிமுகவுக்கு செல்வதாக ஊடகங்கள் மூலமாக சொல்லப்படும் தகவல் உண்மையா? பரப்பப்படும் பொய்ப்பிரச்சாரமா? பார்ப்போம்.
திமுகவின் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வருவதற்கு முன்னரே திமுக பக்கம் நின்றவர். பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவர். தமிழக அரசியல் களத்தை நன்கு அறிந்த இளைஞர், நவீன காலத்துக்கு ஏற்ப திமுக நகர்வதற்கு பெரிதும் உதவியவர் ஆதவ் அர்ஜுன். கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் வியூக வகுப்பாளராக வெற்றிகரமாக செயல்பட்டவர். பிரசாந்த் கிஷோரை திமுகவுக்கு செயல்பட அழைத்து வந்தவர்.
மூன்று தேர்தல்களில் பிரஷாந்த் கிஷோருடன் இணைந்தும், பின்னர் பென் அமைப்பை உருவாக்கியும், பின்னர் உதயநிதியுடனும் இணைந்து பணியாற்றியவர் ஆதவ் அர்ஜுனா. லாட்டரி மார்ட்டின் மருமகன் என்கிற அடையாள மொழியுடன் வந்தாலும் தன்னுடைய தனித்திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஆதவ் அர்ஜுனா. ஆழ்ந்த படிப்பாளி, பெரியார் மீது பற்றுக்கொண்டவர், திமுகவில் நவீன அரசியலுக்கு மாறுவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.
இந்நிலையில் திமுகவின் அதிகார மையத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் திமுகவின் தொடர்பை துண்டித்து விசிகவில் நுழைந்தார். அதுமுதல் அவரது அரசியல் பயணம் தொடங்கியது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்ததும் அவருக்கு துணைப்பொதுச் செயலாளர் பதவி அவழங்கப்பட்டது. இது ஆண்டுக்கணக்கில் நிர்வாகிகளாக இருந்து திமுகவுடன் ஐக்கியமாகிவிட்ட மற்ற நிர்வாகிகளுக்கு உறுத்தலாக இருந்தது.
திமுகவுக்கும் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தது உறுத்தலாக இருந்தது. ஆனால் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனாவுக்கு பக்கபலமாக இருந்ததால் அவரால் எளிதாக செயல்பட முடிந்தது. விசிகவுக்குள் ஒரு புதுமையை, வேகத்தை கூட்ட எழுச்சி மாநாடு, மது ஒழிப்பு மாநாடு என நடத்தினார். இது விசிக தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுவல்லாமல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான உரிமையை பேசினார். திமுகவால் கூட்டணிக்கட்சிகள் வாழ்வு பெற்றதுபோல், கூட்டணிக்கட்சிகளாலும் திமுக ஆட்சியை பிடித்தது என்றும், ஆட்சியில் பங்கு அதிகார பகிர்வு குறித்தும் பேசியதால், விசிக நிர்வாகிகளை வைத்து ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக காய் நகர்த்தப்பட்டது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக இருந்த திருமாவலவனும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. இதன் உச்ச கட்டமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள விஜய் அழைக்கப்பட்டதும், திருமாவளவன் கலந்துக்கொள்ள கூடாது என கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் கலந்துக்கொள்ளவில்லை, இந்த கூட்டத்தில் மன்னர் மனப்பான்மை என திமுக ஆட்சியை விமர்சித்ததை ஏற்காமல் ஆதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் விசிகவிலிருந்து விலகினார். இந்த நேரத்தில் அடுத்து என்ன முடிவெடுப்பது என ஆதவ் அர்ஜுனா யோசித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆதவ் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும், தனி அமைப்பு தொடங்கி கட்சிகளுக்கு வியூக வகுப்பாளராக வேண்டும், அதிமுகவில் இணைய வேண்டும் அல்லது தவெகவில் இணைய வேண்டும் என்கிற ஆப்ஷன்கள் உள்ள நிலையில் தற்போது தவெகவில் உள்ள உட்கட்சி பிரச்சனை காரணமாக தனது முடிவை தள்ளி வைத்து விளையாட்டு பக்கம் கவனம் செலுத்துகிறார் ஆதவ் அர்ஜுனா.
ஆனாலும் அவ்வப்போது அரசின் நடவடிக்கைகளை கண்டிக்க தயங்கியதில்லை. இதில் வேங்கைவயல் மலம் கலந்த விவகாரத்தில் கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்களை குற்றவாளிகள் என சார்ஜ்ஷீட் தாக்கல் செய்யப்பட்டதை ஆதவ் அர்ஜுனா கண்டித்து அவர்கள் சட்ட போராட்டம் நடத்த துணையாக இருப்பேன் என பதிவிட்டிருந்தார். இது ஆளுங்கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் ஆளுங்கட்சி ஆதரவு சமூக வலைதள செயற்பாட்டாளர்களால் ”ஆதவ் அர்ஜுனா ஜன 31 அன்று அதிமுகவில் இணைய உள்ளார், அவருக்கு விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகியாக பொறுப்பு வழங்கப்படுகிறது, ஐபேக் கொண்டுவர பேசி வருகிறார்” என பதிவிடப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டபோது விஜய் அவரை தவெகவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. ஆதவ் அர்ஜுனும் தவெகவில் இணைய முடிவெடுத்தார். அவ்வாறு ஒருவர் தவெகவில் இணைவது தவெகவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. ஆனால் தவெகவின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்தும், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியும் பெரும் தடையாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா மட்டுமல்ல பல தலைவர்கள் இணைவதற்கும் அவர்கள் தடையாக உள்ளதால் ஆதவ் போன்றோர் காத்திருக்கும் நிலை உள்ளது என்று கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய உள்ளார் என்கிற கதையின் பின்னனி குறித்து அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது ”ஆதவ் சமீபத்தில் வேங்கைவயல் விவகாரம் குறித்து பதிவிட்டிருந்தார் அதனால் ஆத்திரமடைந்தவர்கள் ஆதவ் மீது இவ்வாறு ஒரு கருத்தை வைக்கின்றனர். ஆதவ் அர்ஜுன் தவெக பக்கம் போய்விட்டால் அது திமுக கூட்டணிக்கு சிக்கல் என்பதால் அதை மடைமாற்றும் முயற்சியில் இவ்வாறு பொய் செய்தி பரப்புகின்றனர், ஆதவ் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். அது இவர்களுக்கு சிக்கலாக அமையும் பொருத்திருந்து பாருங்கள்” என தெரிவித்தனர். பார்ப்போம்.