×
 

மெல்லச் சாகும் இந்தியா கூட்டணி! டெல்லி தேர்தல் உணர்த்தும் பாடம் என்ன?

மெல்லச் சாகும் இந்தியா கூட்டணி! டெல்லி தேர்தல் உணர்த்தும் பாடம் என்ன?

டெல்லி – யூனியன் பிரதேசமாக, சிறிய நிலப்பரப்பாக இருந்தாலும், அரசியலில் அதன் தாக்கமும், வீச்சும் அதிகம். டெல்லி தேர்தல் முடிவுகள் பல கட்சிகளுக்கு இடியாக இறங்கியுள்ளது, பல செய்திகளை உணர்த்தியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வீழ்ச்சி, 27 ஆண்டுகால அஸ்தமத்துக்குப்பின் பாஜகவின் எழுச்சி டெல்லியில் தொடங்கியுள்ளது.

டெல்லி தேர்தல் உணர்த்தும் பாடம் என்னவென்றால், ‘இலவச அரசியல்’ தொடர்ந்து இங்கு இருக்கும், அது மட்டும் வாழாமல் அதன் எச்சங்களையும் விட்டுச் செல்லும் என்பதுதான். இலவச மின்சாரம், குடிநீர், பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை ஆகியவை மக்களால் முதலிடத்தில் ரசிக்கப்பட்டன, இந்தத் தேர்தலில் பெண்களுக்கு வருமான உதவித் தொகை திட்டத்தை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜகவும் போட்டிபோட்டு ஆதரித்தன.

ஆம் ஆத்மி அரசு வழங்கிய இலவசங்கள்  நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் என்பதை பாஜக வாக்குறுதியும் அளித்தது. இது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான  போட்டியாகத் தெரியவில்லை. இலவசங்கள் மற்றும் இலவசங்களுக்கு இடையிலான போட்டியாகத் தெரிந்தது.

இதையும் படிங்க: இண்டியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி..!

இந்த ரேஸில் பாஜக முன்னணி வகித்து ஆட்சியைப் பிடித்தது. அதற்கு காரணம், இலவசங்களை வழங்குவதாக உறுதியளிக்கும் கட்சிகளின் சாதனைப் பதிவை வாக்காளர் நினைவில் வைத்திருக்கும் வகையில் செயல்படுவது. மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜகவின் சாதனையை மக்ளுக்கு நினைவூட்டியது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை வழங்கத் தவறியதை சுட்டிக்காட்டியது.

2வதாக இலவசங்கள் மட்டும் தனியாக ஒரு கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்துவிடாது, சிறந்த, குழப்பற்ற நிர்வாகமும் இருக்க வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே அடிக்கடி எழும் மோதலால் எந்த திட்டங்கள் செயல்பாட்டுவரும், மக்கள் எதை அனுபவிப்பார்கள் என்பது கேள்விக்குறியானது.

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்  ராஜினாமா செய்ய கோரப்பட்டது. ஆனால், அவர் தொடக்கத்தில் மறுத்துவிட்டார்.  அரசியல் ஆதாயத்துக்காக, நல்ல நிர்வாகம் தியாகம் செய்யப்படுகிறது என்பதை மக்களை நம்ப வைக்க போடப்பட்ட நாடகம் போல் தெரிந்தது.

மற்றொரு பெரிய தாக்கம் என்னவென்றால், எதிர்க்கட்சியின் அரசியல். குறிப்பாக இந்தியா கூட்டணி இந்த தோல்வியால் மெல்ல சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலின்போதே இந்தியா கூட்டணிக்கான சாவுமணி அடிக்கப்பட்டநிலையில் இப்போதுதான் அதன் ஒலி அந்தக்கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்டுள்ளது.

டெல்லி தேர்தலைப் பொருத்தவரை தாங்கள் வெல்கிறோமோ இல்லையோ, ஆம் ஆத்மி தோற்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சி வேலை செய்து, முடிவுல் பாஜகவை அரியணை ஏற்றிவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி, ஆம் ஆத்மியின் தோல்வியில் முடிந்துள்ளது. 

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும என்ற தீர்மானம் இல்லை, விருப்பமும் இல்லை, மாறாக ஆம் ஆத்மியை இறக்க வேண்டும் என்ற  செயல்பட்டதில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஆதாயம் பெற்றது முழுமையாக பாஜகதான்.
உண்மையில் பாஜக வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதைவிட, காங்கிஸ் கட்சிக்குத்தான் நன்றிகூற வேண்டும்.  உதாரணமாக புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்க, காரணமே காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்சித் பெற்ற வாக்குகள்தான். 

இந்தியா கூட்டணி எனும் சித்தாந்தத்தையே காங்கிரஸ் கட்சி குழிதோண்டி புதைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகார தாகம் இதோடு முடிவுக்கு வராது, அடுத்ததாக, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிஸ் கடுமையான சவால்விடுத்த நிலையில் 2027ம் ஆண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது என்பது இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் புரிகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி இந்தியா கூட்டணி வருவதற்கு முன்பே உருவானது, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியும் இந்தியா கூட்டணிக்கு முன்பே 2019ல் வந்தது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ்வாதிக் கட்சியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்து தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். ஆகவே, மக்களவைத் தேர்தலுக்காகத்தான் இந்தியா கூட்டணி இப்போதுள்ள சூழலில் காலம் கடந்த விஷயமாகிவிட்டது.
டெல்லி தேர்தல் ஒரு முக்கியமான பிரச்சினையைப் பேசுகிறது. வாக்காளருடன் சித்தாந்த மற்றும் கொள்கை ரீதியான ஈடுபாட்டைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது.

ஊழல் எதிர்ப்பு என்ற கொள்கையை முன்வைத்து அரசியலுக்குள் பிரவேசித்த ஆம் ஆத்மி கட்சி, அந்த புள்ளியைத் தாண்டி மக்களுக்கு, வாக்காளர்ளுக்கு மாற்றுச் சித்தாந்தத்தை வழங்க தவறிவிட்டது சிறுபான்மையினரையும், அவர்களின் ஆதரவு தளத்தையும் ஆம் ஆத்மி கட்சி அந்நியப்படுத்தி அவரக்ளை அரவணைக்கத் தவறியது. 

ஒருநேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக ஆதரவுவழங்கி, அவர்களை இருகரத்தோடு வாரி அணைத்தது சிறுபான்மையினரும், கீழ்நடுத்தரக் குடும்பத்தினரும், ஏழைகளும்தான். ஆனால், அவர்களுக்கான அரசியலை ஆம்ஆத்மி கட்சி செய்யாமல் அந்நியப்பட்டது. 

இலவசங்கள், இலவச அறிவிப்புகள் அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளைக் கொண்டு வரலாம், ஆனால் சித்தாந்த ரீதியாக ஈடுபாடு கொண்ட களம்தான், அரசியல் விளையாட்டில் தொடர்ந்து நிலைக்க வைத்திருக்கும். தேசத்தின் இளம் அரசியல் கட்சியான ஆம்ஆத்மிக்கு இனி கடுமையான காலம் தொடங்குகிறது.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலோடு இண்டியா கூட்டணி அவ்ளோதானா.? சரத் பவார் போட்டாரே ஒரு போடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share