வக்ஃபு வாரியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை: பாஜக தலைவர் ஜேபி நட்டா உறுதி..!
வக்ஃபு வாரியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படத்தான் உறுதி செய்கிறோம் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி நிறுவப்பட்டு 46வது ஆண்டு விழா அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா பங்கேற்று பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய வக்ஃபு வாரியச் சட்டத்தின் மூலம் வக்ஃபு சொத்துக்களையோ, வக்ஃபு வாரியங்களையோ கட்டுப்படுத்த விரும்பவில்லை. ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு வக்ஃபு வாரியங்கள் செயல்படுவதை உறுதி செய்யவே சட்டம் இயற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் பில் கேட்ஸ் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?
வக்ஃபு வாரியச் சொத்துக்கள் அனைத்தும் முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்காக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சட்டம் இயற்றினோம். துருக்கி உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் நாடுகளில் வக்ஃபு வாரியங்களை அந்த அரசுகளே கட்டுப்படுத்துகின்றன, சொத்துக்களை அரசே நிர்வகிக்கின்றன. ஆனால், நாங்கள் என்ன கேட்கிறோம், வக்ஃபு வாரியங்களை நிர்வாகம் செய்பவர்கள், சட்டப்படி, விதிப்படி நிர்வகியுங்கள் என்றுதான் சட்டம் இயற்றி இருக்கிறோம். நீங்கள் சட்டத்தின் படி செயல்படுங்கள்.
வக்ஃபு வாரியங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தாது. எங்கள் இலக்கு என்பது, சட்டத்துக்கு உட்பட்டு, விதிகளை கடைபிடித்து வக்ஃபு வாரியங்கள் செயல்படுவதை உறுதி செய்வதாகும்.
இவ்வாறு ஜேபி நட்டா தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு திருத்த மசோதா கடந்த வாரம் மக்களவையிலும், மாநிலங்களையிலும் பெரும் விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இருந்ததால் இந்த மசோதா எந்தவிதமான சிரமும் இன்றி நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்வும் கையொப்பமிட்டதையடுத்து, நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: வக்ஃபு வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் எவ்வளவு, அசையா சொத்துக்கள் மதிப்பு எவ்வளவு..?