இட்லி வேக வைக்க பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்த ஓட்டல்களுக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓட்டல்களில் இட்லியை வேகவைக்க கேன்சர் வரவழைக்கும் பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்த தடை விதித்து மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கேரள மாநிலங்களில் இட்லியை வேகவைக்க துணி அல்லது, எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கும் முறையை கையாள்கிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இட்லியை எளிதாக எடுக்கும் பொருட்டு பிளாஸ்டிக் ஷீட்களை இட்லி தட்டு குழியில் வைத்து மாவை ஊற்றி இட்லி வேக வைக்கிறார்கள். இதனால் இட்லி வேகும் அதேவேளையில் பிளாஸ்டிக் பேப்பரும் நீராவியில் வெந்து, அதனுடைய நச்சுப் பொருட்கள் உணவுப் பொருட்களில் சேர்கின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வெளியேறும் நச்சுப் பொருட்கள் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாக முக்கியக் காரணமாகிறது என்று சமீபத்தில்தெரியவந்தது.
இதையடுத்து, கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், மாநிலத்தில் உள்ள 51 ஓட்டல்களில் இட்லி வேகவைக்க பிளாஸ்டிஸ் ஷீட் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதையடுத்து, அந்த உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் இட்லி வேக வைக்க இனிமேல் பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் திணேஷ் குண்டுராவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உணவு சமைப்பது என்பது பொதுநல சுகாதாரத்துக்கு ஆபத்தானது. இட்லியை தயார் செய்ய, நச்சுமிகுந்த பிளாஸ்டிஸ் ஷீட்களை ஓட்டல்களில் பயன்படுத்துகிறார்கள். இது நுகர்வோரின் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.
இதையும் படிங்க: சுற்றுலா பயணிகளே உஷார்.. கொடைக்கானலுக்கு போறதா இருந்தா இத தெரிஞ்சிட்டு போங்க.. ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!
அனைத்து ஓட்டல்கள், உணவகங்கள், நிறுவனங்களில் இட்லி வேகவைக்க பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பாதுகாப்பான வழிகளில் உணவு சமையுங்கள். ஸ்டீல் பிளேட்கள் அல்லது வாழை இழைகளைகளைப் பயன்படுத்தி இட்லி வேகவையுங்கள். மக்களின் சுகாதாரம், உடல்நலத்தில் சமரசம் செய்யக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் “ கர்நாடக மாநிலத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் ஆய்வு நடத்தி 251 ஓட்டல்களி்ல் இருந்து உணவு மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பொதுவாக இட்லி வேகவைக்க பருத்து துணிகளைத்தான் பெரும்பாலும் முன்பிருந்து பயன்படுத்துவார்கள், ஆனால், இப்போது பலஓட்டல்களில் பருத்தி துணிகளுக்குப்பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களில் இட்லி வேகவைப்பதாக புகார்கள் வருகின்றன.
இந்த புகார்களையடுத்து, எங்கள் அதிகாரிகள் 52 ஓட்டல்களில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பயன்படுத்தி இட்லி வேகவைப்பதை கண்டறிந்துள்ளனர். உணவகங்கள் நடத்துவோர் கண்டிப்பாக பிளாஸ்டிக் ஷீட்களைப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் பிளாஸ்டிக் ஷீட்கள் விஷத்தன்மை கொண்டது. பிளாஸ்டிக்கை இட்லியுடன் வேகவைக்கும்போது, நச்சுத்தன்மை உணவுப்பொருட்களில் கலந்துவிடும். உணவுப் பொருட்கள் தயாரித்ததில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. பிளாஸ்டி ஷீட்களைப் பயன்படுத்தி இட்லி வேகவைக்கும் முறை மாநிலத்தில் தடை செய்யப்படுகிறது. இனிமேல் எந்த உணவகத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்தி இட்லி சமைக்கக்கூடாது, அவ்வாறு செய்தால் மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையைப் பண்ணவே கூடாது.. தமிழக முதல்வர் எதிர்ப்பை தொடர்ந்து கர்நாடக முதல்வர் தடாலடி..!