முதியவர்களுக்கு தனி ஆணையம் அமைத்தது கேரளா.. வரலாற்று சாதனை..!
முதியவர்களுக்கு என தனி ஆணையம் அமைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது கேரள மாநிலம்.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முதியோர் ஆணையத்தை நிறுவி வரலாற்றில் இடம்பிடித்தது கேரள மாநிலம். இந்த மகத்தான நடவடிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் பெரிதும் பாராட்டியுள்ளார்.
கேரள மாநில சட்டமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட கேரள மாநில முதியோர் ஆணைய மசோதா, முதியவர்களின் உரிமைகள், நலன் மற்றும் மறுவாழ்வை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும். முதியோர் பராமரிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள கேரளத்தின் நிலையை இது மேலும் வலுப்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) அரசின் முதியோருக்கான முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிப்பதை பெருமையாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திணறும் கேரள அரசு..! கைமீறும் போதைக் கலாச்சாரம்..! ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 வழக்குகள் பதிவு..!
முந்தைய பதவிக்காலத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகளை மேம்படுத்த இந்த ஆணையம் ஒரு துணிச்சலான நல்ல முடிவை எடுத்துள்ளதாக பினராயி தெரிவித்தார். முதியோர் நலனில் கேரளம் மற்றொரு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது என்றும் முதியோர்கள் பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுதல், அவர்களது சொத்து மற்றும் உடைமைகளை சுரண்டுதல், தனிமை படுத்துதல் என கேரளாவில் உள்ள மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களாக உள்ளது. இந்த சவால்களை இந்த புதிய ஆணையம் நிச்சயம் முறியடித்து முதியோர்களுக்கான உரிமையை பெற்றுத்தரும் என கேரள முதலமைச்சர் கூறியுள்ளார்.
முதியவர்களின் திறமைகளை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தவும், இந்த பிரச்சினைகளை தீர்க்க வழிகாட்டுதல்களை வழங்கவும் ஆணையம் செயல்படும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 60 வயதுக்கு மேற்பட்டோர் 12.6% ஆக உள்ள கேரளத்தின் முதிய மக்கள்தொகை, தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இது இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த நடவடிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. முதியோர்களுக்கான “மறுவாழ்வு, பாதுகாப்பு மற்றும் நலனை” மிகவும் திறம்பட உறுதி செய்யும் என்று விஜயன் கூறினார். முதியவர்கள் சுறுசுறுப்பாக பங்கேற்கும் “புதிய கேரளத்திற்கு” இது ஒரு ஊக்கியாக இருக்கும் என்றார். “அவர்களின் நலனை பாதுகாப்பது மாநிலத்தின் கடமை, நாங்கள் சிறப்புக்கு உறுதியளிக்கிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கேரளத்தின் அதிகபட்ச ஆயுட்காலம் (75 ஆண்டுகள், இந்தியாவின் 69.4-ஐ ஒப்பிடுகையில்) மற்றும் விரிவான ஓய்வூதிய திட்டங்கள் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் முதல் முதியோர் ஆணையமாக உருவெடுத்துள்ள இது, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சி.எஸ்.ஆர். நிதி மோசடி.. ஆயிரத்துக்கும் அதிகமான எப்.ஐ.ஆர் பதிவு - பினராயி விஜயன் தகவல்..!