×
 

குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ரவி நேரில் அஞ்சலி.. திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!

மறைந்த குமரி ஆனந்தன் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் வயோதிகம் காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குமரி அனந்தன் காலமானார்.

இதையடுத்து குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. குமரி அனந்தன் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடக்கிறது. மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: குமரி அனந்தன் உடலுக்கு முழு அரசு மரியாதை.. நேரில் சென்று முதல்வர் அஞ்சலி..!

குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் சென்று குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.

மேலும், குமரி அனந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் தனிப்பட்ட முறையில் தன் மீது மாறாத அன்பு கொண்டவர் குமரி ஆனந்தன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 

தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா இறைவன் திருவடிகளை அடைய வேண்டி கொள்வதாகவும் கூறியுள்ளார்.

எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த குமரி ஆனந்தன் காலமான செய்தி அறிந்த வேதனை அடைந்ததாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... தந்தை மறைவு பற்றி தமிழிசையின் உருக்கமான பதிவு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share