×
 

இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற போலீஸ்... பாஜக எம்எல்ஏ கண்டனம்..!

மத்தியப் பிரதேசத்தில் 9 இளைஞர்களுக்கு மொட்டையடித்து, ஊர்வலமாக இழுத்து சென்ற போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் தேவாஸ் நகரில் 9 இளைஞர்களுக்கு மொட்டையடித்து, கைவிலங்கிட்டு ஊர்வலமாக போலீஸார் அழைத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளன.

கடந்த 9ம்ததேி சாம்பியன்ஸ் டிராபி பைனலின்போது போலீஸாருடன் இந்த 9 இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டதற்காக இதுபோன்ற மனிதநேயற்ற தண்டனைகளை போலீஸார் தன்னிச்சையாக வழங்கியுள்ளனர். போலீஸாரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு ஆளும் பாஜக அரசின் பாஜக எம்எல்ஏ காயத்ரி ராஜே பவார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இந்த சம்பவம் தொடர்பாக தேவாஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புனீத் கெலாட்டுக்கும் தகவல் தெரிவித்து, உரிய  விசாரணை நடத்த வேண்டும் என வலியுறத்தியுள்ளார். இதையடுத்து துணை ஆணையர் ஜெய்வீர் சிங் பதோரியா தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழுமையாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செல்போன் நட்பால் வந்த விபரீதம்.. 5 நாட்கள் சித்ரவதை... 17 வயது சிறுமியை சிதைத்த கொடூரன் கைது..!

9 இளைஞர்களின் தலை ஏன் மொட்டையடிக்கப்பட்டது, மோதல் ஏன் ஏற்பட்டது, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட காரணம் என்ன, போலீஸார் என்ன விதமான அதிகாரத்தை பயன்படுத்தினார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல் கண்காணப்பாளர் புனீத் கெலாட் கூறுகையில் “ இளைஞர்கள் மொட்டையடிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அடுத்த 7 நாட்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கையை அளிக்கவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாகவே இந்த 9 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இந்த இளைஞர்கள் நடத்திய வன்முறையில் சாலையில் மோமோஸ் விற்பனை செய்த ஒருவரும் காயமடைந்துள்ளார், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ” எனத் தெரிவித்தார்.

கடந்த 9ம் தேதி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி பைனல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டி முடிந்தபின் நடந்த கொண்டாட்டத்தின் போது கோட்வாலா காவல் நிலையத்தில் சில இளைஞர்கள் தவறாக நடந்துள்ளனர். காவல்நிலைய பொறுப்பு அதிகாரி அஜெய் குர்ஜாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே பட்டாசு வெடித்ததில் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்தின் மீது கற்கள், கம்புகள் கொண்டு சிலர் தாக்கும் வீடியோ காட்சிகளும் வெளியானது.

இதனிடையே எம்எல்ஏ காயத்ரி ராஜே, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஏன் மொட்டையடிக்கப்பட்டார்கள், போலீஸாரின் அத்துமீறல் நடவடிக்கையை எதிர்த்து இளைஞர்களின் குடும்பத்தாருடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டார். 

எம்எல்ஏ காயத்ரி ராஜே கூறுகையில் “ இளைஞர்கள் 9 பேர்  குற்றம் செய்திருந்தால் கைது செய்து வழக்குபோடுங்கள், ஆனால், சட்டத்தை கையில் எடுத்து அந்த இளைஞர்களுக்கு மொட்டையடிக்க போலீஸாருக்கு யார் அதிகாரம் அளித்தது.அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் அல்ல. இந்த விவகாரத்தில் கண்காணிப்பாளர் உரிய நியாயமான விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: இதுதாண்டா மோடி..! 10,12 -ம் வகுப்பு தேர்வு பாதிக்கப்படக்கூடாது.. 15 நிமிடம் தனது கான்வாயை தாமதப்படுத்திய பிரதமர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share