தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசர கால விடுப்பு... எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு....
தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் தண்டனைக் கைதிகளாக உள்ள திருகுமரன், சின்னதுரை, தங்கப்பாண்டி, ரமேஷ் மற்றும் ஜோதிமுருகன் ஆகியோர், தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இருவேறு அமர்வுகளின் மாறுப்பட்ட தீர்ப்புகள் வழங்கியதால், இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், தமிழ்செல்வி மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளின் படி, தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும் போது, கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசரகால விடுப்போ அளிக்க இயலுமா?
இதையும் படிங்க: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம்... 30 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு...
தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்கும்போது தண்டனை காலத்தை, கைது செய்யப்பட்ட நாள் முதல் கணக்கில் எடுத்து கொள்ள முடியுமா மற்றும் விசாரணைக் காலத்தில் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள முடியுமா? கைதிகளுக்கு விடுப்பு தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும்போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பு வழங்க சிறை அலுவலர்களுக்கு தடை ஏதும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் சிறை தண்டனை என்பது கீழமை நீதிமன்றம், தண்டனை வழங்கிய நாளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் வாதிட்டார்.
இது தவிர, தண்டனை கைதிகள் மீது வேறு வழக்குகள் விசாரணையில் இருந்தால், விடுப்பு வழங்க முடியாது என்றும் விடுப்பு வழங்குவது குறித்த அனைத்து விதிகளுக்கும், விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, கைதிகளின் மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதி மன்றத்திலோ நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என தெளிவுபடுத்தியது.
விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும்போது, கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நாள் மற்றும் தண்டனைக்கு முன் சிறையில் இருந்த விசாரணை நாட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தண்டனைக் கைதிகளுக்கு எதிராக வேறு வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்தால், அந்த கைதி விடுப்பு பெற தகுதியில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீமான் அடித்த பல்டியை பார்த்து எனக்கே வெட்கக்கேடா இருக்கு... ஜெயக்குமாரையும் தெறிக்கவிட்ட டிடிவி தினகரன் விமர்சனம்...!