×
 

'லவ் ஜி காத்'தை தடுக்க சிறப்பு குழு: மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி ; "ஹிட்லர் கலாசாரம்" என, எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

மும்பை: கட்டாய மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் போன்றவற்றை தடுக்க 7 பேர் சிறப்பு குழுவை மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது.

காதல் என்ற பெயரில் இளம் பெண்களை திருமணம் செய்து பின்னர் அவர்களை மதமாற்றம் செய்வதை 'லவ் ஜிகாத்' என்று அழைக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநில அரசு இது போன்ற ‌கட்டாய மதமாற்றம் மற்றும் 'லவ் ஜிகாத்' போன்றவற்றை தடுக்க 7 பேர் சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் இது "ஹிட்லர் கலாசாரம்" என்று விமர்சித்து உள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கட்டாய மதமாற்றம் மற்றும் காதல் என்ற பெயரில் (லவ் ஜிகாத்) மதமாற்றம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க வேண்டும். அதற்காக மகாராஷ்டிராவில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த காலங்களில் கூறி வந்தார்.

இதையும் படிங்க: 35 வார 'கரு'வுக்குள், கை - கால்களுடன் மற்றொரு 'கரு' ; மகாராஷ்டிரா மாநில கர்ப்பிணிப் பெண் வயிற்றில் வினோதம்

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரத்தா வால்கர் என்ற பெண்ணின் கொடூர கொலையை தொடர்ந்து இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு தீவிரம் செலுத்தியது. 

27 வயது பெண்ணான வால்கர் கொலை செய்யப்பட்டு, அவருடன் இருந்த துணைவரான ஆஃப்தாப் பூனாவாலாவால் என்பவர் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் போன்ற நடவடிக்கைகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க மாநில தலைமை போலீஸ் அதிகாரி (டிஜிபி) சஞ்சய் வர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து அரசு தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

"கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் போன்றவற்றை தடுக்க 7 பேர் குழு நியமிக்கப்படுகிறது. அதில் டிஜிபி தவிர உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை, சட்டம் நீதித்துறை, சமூக நீதித் துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 6 பேர் இடம் பெறுவார்கள். 

இக்குழுவினர் மகாராஷ்டிராவில் தற்போதுள்ள சூழ்நிலை. லவ் ஜிகாத் பற்றி வரும் புகார்களை கையாளும் முறை, கட்டாய மதமாற்றம், மற்ற மாநிலங்களில் இது தொடர்பாக அமலில் உள்ள சட்டங்கள், புதிய சட்டத்துக்கான விதிமுறைகள், புதிய சட்டத்தால் ஏற்படும் தாக்கங்கள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும" என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

"ஹிட்லர் கலாச்சாரத்தை கொண்டு வர முயற்சி"

இந்த குழுவை அமைக்கும் மாநில அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சுப்ரியா சுலே, "திருமணம் செய்து கொள்வது அல்லது காதலிப்பது என்பது தனிப்பட்ட விருப்பம்" என்று கூறி இருக்கிறார். 

"உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்படி அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். அமெரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இது நம் நாட்டை பாதிக்கும். இது போன்ற விஷயங்களில் அரசு அதிக கவனம் செலுத்தி பொருளாதார நிலைமையே சரி செய்ய முயற்சிக்க வேண்டும்" என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இது குறித்து சமாஜ்வாதி எம்எல்ஏ ராய்ஸ் ஷேக் கூறும் போது. “லவ் ஜிகாத் குறித்து மகாராஷ்டிர அரசிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லை. ஆனால் கட்டாய மதமாற்றம், ஜிகாத் என்றெல்லாம் கூறி அரசியல் செய்கிறது. லவ் ஜிகாத் குறித்து மகாராஷ்டிர போலீஸில் எந்த புகாரும் வரவில்லை. இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த புள்ளி விவரமும் இல்லை” என்றார்.

சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான அபூ அஸ்மி "அரசாங்கம் முஸ்லிம்களை துன்புறுத்துவதிலும் வகுப்புவாதத்தை பரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது " என்று குற்றம் சாட்டினார். 

"அவர்கள் 'லிவ் இன்' உறவுகளுக்கு சுதந்திரம் கொடுக்க விரும்புகிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கலப்பு திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அல்லது மதம் மாற விரும்பினால் அவர்களுக்கு அதில் சிக்கல் உள்ளது. லவ் ஜிகாத் என்ற ஒன்று இல்லவே இல்லை" என்றும் அவர் தெரிவித்தார். 

"கட்டாய மதமாற்றம் நடக்காது என்றும் லவ் ஜிகாத் என்பது ஒரு கட்டுக்கதை என்றும் காங்கிரஸ் தலைவர் உசேன் தல்வாய் கோரி இருக்கிறார்.

' ஜனநாயகம் அனைவரும் எந்த மதத்தையும் பின்பற்ற அனுமதிக்கிறது நமது நாடு மதச்சார்பற்றது. ஆனால் சிலர் நமது கலாச்சாரத்தின் கட்டமைப்பை அழிக்க விரும்புகிறார்கள் அவர்கள் உண்மையில் எத்தனை லவ் ஜிகாத் சம்பவங்களை கண்டிருக்கிறார்கள் என்பதை கூறட்டும். இந்த மக்கள் ஹிட்லரின் கலாச்சாரத்தை நம் நாட்டிற்கு கொண்டு வர விரும்புகிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார். 

பாஜக ஆதரவு 

மாநில அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்து பேசிய பாஜக எம்எல்ஏ மங்கள் லோதா, "நாடு முழுவதும் லவ் ஜிகாத் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஸ்ரத்தா வால்கர் எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டார் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். மகாராஷ்டிராவில் இது போன்ற பல வழக்குகள் உள்ளன. இவற்றை நிறுத்த முயற்சிக்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பிரச்சினை உள்ளது" என்று அவர் கூறினார். 
 

இதையும் படிங்க: சைஃப் அலிகான் தாக்கப்பட்ட பின்னணியில் நிழல் உலக தாதா கும்பல்..? மகாராஷ்டிரா அமைச்சர் சொன்ன உண்மை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share