×
 

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைகள்... தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்...

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருந்தாலும் அவ்வப்போது முக்கிய மசோதாக்களுக்கு ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் தந்துவிடும் அபூர்வ நிகழ்வுகளும் நடந்தேறும். அப்படியான ஒன்றுதான் இப்போது நடைபெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, அண்ணாநகர் சிறுமிக்கு நேர்ந்த கதி ஆகிய சம்பவங்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பெரும் விவாதத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தின. அதேவேளையில் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரும் நடைபெற்று வந்தது. இந்த பிரச்னைகளை எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் வலுவாக எழுப்பின. கட்சி பேதமின்றி யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உறுதி அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 11-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது நடத்தப்படும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் இரண்டு சட்ட மசோதாக்கள் ஓருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: ’இங்கு பேசாமல் எங்கு பேசுவது?’.... ஆளுநர் குறித்த பேச்சுக்கு அனுமதி மறுப்பு... வெளிநடப்பு செய்த சபாநாயகர் அப்பாவு

அதாவது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும், பெண்களுக்கு ஊறுவிளைவிப்பதை தடை செய்யும் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த BNS எனும் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் BNSS பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா ஆகிய 2 சட்டங்களுக்கு பொருந்தக் கூடிய வகையில் இந்த மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த சட்டமுன்வடிவுகளை கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் 86 சதவிதத்திற்கும் மேலான வழக்குகளில் வெறும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு பற்றி 2.40 லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கும் ஒப்புதல் கிடைத்தவுடன் அவை சட்டங்களாக நடைமுறைக்கு வரும். அப்படி வரும்பட்சத்தில் எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை பார்ப்போம்.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை.. 18 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை... மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கும். ஆசிட் வீசுவதாக மிரட்டினால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கக்கூடும் அதேபோன்று ஆசிட் வீசி கொடுங்காயத்தை ஏற்படுத்தினால் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை நிச்சயம்.

இதையும் படிங்க: தமிழக அரசுடன் கவர்னர் மோதல்: நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள்; உச்ச நீதிமன்ற வழக்குகள் முழு விவரம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share