×
 

கவலைக்கிடத்தில் மியான்மர்.. 2,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..! நிவாரண பணியில் இந்தியா..!

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சீட்டுக்கட்டுகள் போல் குடியிருப்புகள் சரிந்தன. முதலில் இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்ததுடன், 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளைச் சந்தித்துள்ளன. 

குறிப்பாக தலைநகர் நேபிடா, மண்டலாய் உட்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள இம்பால், கொல்கத்தா ஆகிய நகரங்களில் லேசான அதிர்வுகளை உணர முடிந்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ! நள்ளிரவில் குலுங்கிய கட்டடங்கள்...

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் பிரம்மா என்ற பெயரில் ராணுவ விமானங்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 

மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன் தீர் ஜெய்ஸ்வால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ஆப்ரேஷன் பிரம்மா என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, 60 டன் நிவாரண பொருட்கள் மற்றும் 118 பேர் கொண்ட இந்திய ராணுவ மருத்துவமனை களப்பிரிவுடன் இரண்டு C17 விமானங்கள் மியான்மரில் தரையிறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாது நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐந்து விமானங்கள் மியான்மருக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

மியான்மரில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை தொடலாம் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: நிலநடுக்கம் பாதிப்பு..! மியான்மர், தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்டிய பிரதமர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share