பெற்றோரை மீறி திருமணம் செய்தால் போலீஸ் பாதுகாப்பு தரமுடியாது.. அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு..!
பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்த காதல்ஜோடி போலீஸ் பாதுகாப்பு கோரமுடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்த காதல் ஜோடி போலீஸ் பாதுகாப்பு கோருவது உரிமை என்று கோர முடியாது, அவர்களின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் உண்மையான அச்சுறுத்தல் இருப்பதாக உணரப்பட்டால் மட்டுமே பாதுகாப்பு கோர முடியும் என்று அலகாபாதா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்த காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை விசாரித்த போது உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
ஸ்ரேயா கேசர்வானி மற்றும் அவரின் கணவர் ஆகியோர் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்புக் கோரியும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் யாரும் தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: இது எப்படி கற்பழிப்பாகும்..! பாலியல் வழக்கில் மீண்டும் சர்ச்சை..! நீதிபதி கேள்வியால் பரபரப்பு..!
இந்த மனு நீதிபதி சவுரவ் ஸ்ரீவஸ்தவா முன் கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
தகுதியான வழக்கின் கீழ் நிச்சயமாக இந்த நீதிமன்றம் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடும். ஆனால் எந்தவிதமான அச்சுறுத்தலும் உண்மையாக இல்லாத நிலையில் அந்த ஜோடி சமூகத்தை எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து வாழ வேண்டும். இந்த மனு மீது நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடாது.
லதா சிங்-உ.பி. அரசு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முன்னுதாரணமாகவே வைத்தே இந்த தீர்ப்பை வழங்குகிறேன். உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், தங்கள் விருப்பப்படி ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்குவதில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து இருப்பதாக முடிவு செய்வதற்கு எந்த ஆதாரமோ அல்லது காரணமோ இல்லை . மனுதாரர்களை் அவர்களின் உறவினர்கள், பெற்றோர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தாக்கக்கூடும் என்பதற்கு ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லை.
தனியார் பிரதிவாதிகளின் சட்டவிரோத நடத்தைக்கு எதிராக எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி எந்த விண்ணப்பத்தையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை.
சித்தரகூட் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுதாரர்கள் ஏற்கெனவே மனு செய்துள்ளனர். இந்த வழக்கில் மனுதாரருக்கு உண்மையான அச்சுறுத்தலோ, உயிருக்கு ஆபத்தோ இருப்பதா போஸீஸார் விசாரணையில் கண்டறியவில்லை. அவ்வாறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். ஒருவேளை மனுதாரர்களுக்கு எதிராக தாக்குதல்களோ, அல்லது தவறான நடத்தையோ இருந்தால் போலீஸ் அதிகாரிகள் வந்து மீட்பார்கள்.
ஆதலால், பெற்றோர் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்த ஜோடி தங்கள் உயிருக்கு உண்மையான அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே போஸீல் பாதுகாப்பு கோர முடியும்இல்லாத பட்சத்தில் போலீஸ் பாதுகாப்பு கோருவதுதங்களின் உரிமை எனக் கொள்ள முடியாது”
இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: ‘மனிதநேயமற்ற, உணர்வற்ற செயல்’: பலாத்கார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!