நோட்டாவிடம் தோற்ற தேசியக் கட்சிகள்! டெல்லி தேர்தலில் ஸ்வாரஸ்யம்
நோட்டாவிடம் தோற்ற தேசியக் கட்சிகள்! டெல்லி தேர்தலில் ஸ்வாரஸ்யம்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக அமோக வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி அமைக்கிறது, அதேசமயம், 4வதுமுறையாக முதல்வராகும் வாய்ப்பை ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் தவறவிட்டார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக அமர்கிறது. கடந்த தேர்தலைவிட 40 இடங்கள் குறைவாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 38.51 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக இந்த முறை 45.56 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேசமயம், கடந்த தேர்தலில் 53.57 சதவீத வாக்கு வங்கியைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை 43.57 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. பாஜக ஏறக்குறைய 7 சதவீதம் வாக்குகளைக் கூடுதலாப் பெற்றது, ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி கடந்த தேர்தலைவிட சற்று அதிகரித்து 6.37 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. இந்த வாக்குகள் அந்தக் கட்சிக்கும் பயன்படவில்லை, ஆம் ஆத்மிக்கும் பயன்படவில்லை, மாறாக பாஜக ஆட்சி அமைக்கவே பயன்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் பதற்றம்… நாடு முழுவதும் 'ஆபரேஷன் பிசாசு வேட்டை...' முகமது யூனுஸின் அரக்கத்தனம்..!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். ஆனால், ஆம் ஆத்மி தோல்வி அடைந்த தொகுதிதளில் அனைத்தும் காங்கிரஸ் கட்சி வாக்குகளைப் பிரித்ததால் அந்த எண்ணிக்கையில்தான் ஆம் ஆத்மி தோல்வி அடைந்துள்ளது.
உதாரணமாக அரவிந்த் கேஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்டார் இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 4,089 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அதேதொகுதியில் போட்டியி்ட்ட காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்சித், 4568 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இந்த வாக்குகள் ஆம் ஆத்மியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் அந்தக் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள், ஆம் ஆத்மியை தோல்வி அடைய பயன்படுத்தப்பட்டன.
இதேபோல ஜங்புரா தொகுதியில் ஆம்ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா 675 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் திராவிந்தர் சிங் மார்வாவிடம் தோற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பர்ஹத் சூரி 7350 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இதேபோல கிரேட்டர் கைலாஷ், மாளவியா நகர், ராஜேந்தர் நகர் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி தோல்வி அடைய, காங்கிரஸ் பிரித்த வாக்குகளை காரணம். காங்கிரஸ் பிரித்த வாக்குகள் அந்தக் கட்சிக்கும் பயன்படவில்லை, யாருக்கும் உதவவில்லை, மாறாக பாஜக ஆட்சிக்குவரவே பயன்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் இரு தேசியக் கட்சிகள் போட்டியிட்டு நோட்டா பெற்ற வாக்கு சதவீதத்தைக் கூட பெறவில்லை என்பது வியப்பாகும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு தேசியக் கட்சிகள் நோட்டாவிடம் தோல்வி அடைந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி நோட்டாவுக்கு 0.57 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0.55 சதவீத வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.01 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன.
கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களி்ல் வலிமையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டெல்லியில் தாக்கத்தை ஏற்படுத்த காலம்காலமாக திணறுகிறது. சமீபத்தில் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமாகியபின், அந்தக் கட்சி பல்வேறு மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகிறது.இந்த தேர்தல் முடிவுள் மார்க்சிஸ்ட் கட்சியை மேலும் பின்னடைவைக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவர் பதவி FOR SALE..! அக்ரீமெண்ட் போட்டு விற்ற தில்லாலங்கடி பெண் தலைவி