வக்ஃபு மசோதாவை எதிர்த்த 300 முஸ்லிம்களுக்கு நோட்டீஸ்: உ.பி. போலீஸார் நடவடிக்கை..!
முசாபர்நகரில் வக்ஃபு மசோதாவை எதிர்த்து கருப்பு பேட்ஜ் அணிந்து தொழுகையில் ஈடுபட்ட 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மாவட்ட நிர்வாகம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் வக்ஃபு மசோதாவை எதிர்த்து கருப்பு பேட்ஜ் அணிந்து தொழுகையில் ஈடுபட்ட 300 பேருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜனநாயக முறைப்படி கருப்பு பேட்ஜ் அணிந்துதான் வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்த 300 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருப்பது சமூக ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த 300 பேரும் ரூ.2 லட்சம் பிணையப் பத்திரம் வழங்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முசாபர்நகர் காவல் கண்காணிப்பாளர் சத்யநாராயணா பிரஜாபதி கூறுகையில் “ வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ.2 லட்சம் பிணையப் பத்திரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டங்களுக்கு 4 ஆண்டுகளாக நிதி தொடர் குறைப்பு... மதரஸா, வக்ஃபுக்கு நிதியில்லை..!
முசாபர்நகர் நகர மாஜிஸ்திரேட் விகாஸ் காஷ்யப், போலீஸாரின் அறிக்கையைத் தொடர்ந்து நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். நோட்டீஸ் பெற்ற 300 பேரும் ரூ.2 லட்சம் பிணையத் தொகை செலுத்தி பத்திரத்தை போலீஸாரிடம் வழங்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
வெள்ளிக்கிழமை நடந்த ரம்ஜான் தொழுகையின் போது, இந்த 300 பேரும் பல்வேறு மசூதிகளில் வக்ஃபு மசோதாவுக்கு எதிராக கையில் கருப்பு பட்டை அணிந்து தொழுகையில் பங்கேற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பெற்றவர்கள் தரப்பில் கூறுகையில் “ நாங்கள் என்ன தவறு செய்தோம். எங்களின் எதிர்ப்பை ஜனநாயக முறைப்படி கைகளில் கருப்பு பட்டை அணிந்துதானே வெளிப்படுத்தினோம். இதற்கு ரூ.2லட்சத்தில் பிணை கோர வேண்டுமா” என்று கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த வக்ஃபு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் கையொப்பமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு எங்களைப்போல இடஒதுக்கீடு தரமுடியுமா? பாஜக-வுக்கு டி.கே.சி சவால்..!